பரணி தீபம், மகா தீபம் காண நாளை முதல் ஆன்லைனில் அனுமதி சீட்டு... ரெடியாகுங்க பக்தர்களே
பரணி தீபம் மற்றும மகா தீபத்தை காண நாளை முதல் இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்திருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோயிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் ஒன்றாக வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோயில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படும்.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரணி தீபம் மற்றும மகா தீபத்தை காண நாளை முதல் இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வருகிற 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் இந்த அனுமதி சீட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.
கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாமம. கோயிலில் பல்வேறு இங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை இணையதளம் மூலம் செலுத்தலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.