Gram Sabha Meeting : கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல் அவசியம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை
கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல் வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
குடியரசு தின விழாவையொட்டி, காணை ஊராட்சி ஒன்றியம், காங்கேயனூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், காங்கேயனூர் ஊராட்சியில், குடியரசு தின விழாவையொட்டி, நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் நேன்று (26.01.2024) கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதனை உணர்ந்து, கிராமங்களில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படும் என உத்தரவிட்டிருந்தார்கள். கிராம சபையின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றுவதே ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், குடியரசு தினத்தினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுபோல், நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொண்டால்தான், கடந்த ஆண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு தணிக்கை அறிக்கை, நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியுதவியினை பெறுதல், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான புதிய திட்டங்களை தேர்வு செய்து, ஒருமனதாக நிறைவேற்றிட இதுபோன்ற கிராம சபைக் கூட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல், ஊராட்சி பகுதிகளில் பணிகள் நடைபெறும்பொழுது பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினை தவிர்த்தல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையினை பயன்படுத்துதல், ஊராட்சியினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டு, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், பொதுமக்கள் வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.