பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 5 மாத குழந்தையை கொடுத்துவிட்ட நடுவழியில் இறங்கி சென்ற இளைஞர்
சென்னையில் இருந்து புதுவை வந்த பஸ்சில் பெண்ணிடம் 5 மாத ஆண் குழந்தையை கொடுத்து விட்டு நடுவழியில் வாலிபர் இறங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து புதுவை வந்த பஸ்சில் பெண்ணிடம் 5 மாத ஆண் குழந்தையை கொடுத்து விட்டு நடுவழியில் வாலிபர் இறங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் சரஸ்வதி (50). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இந்த தம்பதி புதுவை கோவிந்தசாலையில் நடைபெறும் உறவினர் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது கணவருடன் இன்று சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நீலாங்கரையை அடுத்த அக்கரை வாட்டர் டேங்க் பஸ் நிறுத்தத்தில் டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் 5 மாத ஆண் குழந்தையுடன் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த சரஸ்வதியிடம் அவர் குழந்தையை வைத்திருக்குமாறு கொடுத்தார். பச்சிளம் குழந்தை என்பதால் சரஸ்வதியும் வாங்கி வைத்து இருந்தார். பஸ் சிறிது தூரம் வந்த நிலையில் அவரது மடியிலேயே குழந்தை தூங்கி விட்டது. குழந்தையை கொடுத்த நபர் பஸ்சின் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்தார்.
இதற்கிடையே பஸ் மரக்காணத்தை தாண்டி வந்த போது குழந்தை சிறுநீர் கழித்ததால் அதை துடைத்து விட்டு குழந்தையை கொடுத்த நபரை சரஸ்வதி தேடினார். அப்போது அந்த நபர் மாயமானது தெரிந்து சரஸ்வதியும், பஸ்சில் வந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை கொடுத்த நபர் குறித்து பஸ் கண்டக்டர், டிரைவரிடம் விசாரித்த போது அந்த நபர் நடுவழியில் கல்பாக்கத்திலேயே இறங்கி விட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சரஸ்வதி திகைத்தார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் தெரிவித்த ஆலோசனையின்படி குழந்தையை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். ஆனால் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்தது. மகளிர் போலீசார் தாய்மை உணர்வோடு அந்த குழந்தையை வெந்நீரால் குளிப்பாட்டி பால் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அந்த குழந்தை பராமரிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பஸ்சில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு வழியில் இறங்கிச் சென்றவர் யார்? என்பது குறித்து கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
குழந்தையை கடத்தி வந்து அவர் விட்டுச் சென்றாரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொடுத்து தப்பினாரா? உண்மையிலேயே குழந்தை யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்