வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ கைதி தப்பி ஓட்டம் - போலீசார் வலைவீச்சு
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பியோட்டம். தப்பியோடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை கைதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜாவுக்கு சீராக மூச்சுவிடுவதில் பிரச்சினை காணப்பட்டது. இதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள இவருக்கு திடீரென மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சிறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை காவலர்கள் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிகிச்சையின் அறையின் முன்பு சிறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா கழிவறைக்கு சென்று வருவதாக காவல்துறையினரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் அறைக்கு திரும்பி வரவில்லை. சந்தகம் அடைந்த காவல்துறையினர் கழிவறைக்கு சென்று பார்த்தனர் அங்கு கைதி ராஜா காணவில்லை, இதுகுறித்து காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். தப்பி ஓடிய விசாரணை கைதி ராஜாவை காவலர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிய நிலையில் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தப்பியோடிய கைதி ராஜா, மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முதலாவதாக ஆட்டோவில் ஏறுவது போல் சென்று பின்னர் ஆரணி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது. உடனடியாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டனர் அந்த விசாரணையில் பேருந்தில் ஏறியவரிடம் டிக்கெட் கேட்டன் அவரிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவரை நான் கண்ணமங்கலம் கூட்ரோட்டில் இறக்கிவிட்டுன் என கூறியுள்ளார். இதையடுத்து வேலூர் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜாவின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, ரோந்து பணியின் போது அவரை பார்த்தால் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தப்பியோடிய விசாரணை கைதி ராஜாவை தேடி வருகின்றனர்.