போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி
வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி. சிறு சிறு காயங்கள் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவலம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் 1லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வந்தவாசியை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் விவசாயிகள், விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அருகில் உள்ள சிட்கோ போன்ற தொழில் நிறுவனத்திற்கு பணிகளுக்கு செல்வார்கள். இந்த நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென விபத்து ஏற்பட்டால் படுகாயம் அடைந்தவர்கள் வந்தவாசி உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவேண்டும், மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மருந்து உள்ளதாக பெயர்பலகை வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாமல் விபத்து போன்றவையால் சென்றால் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களும் இல்லை.
ஆபத்தான நிலையில் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றங்கள் மட்டும் மிஞ்சுகிறது. பாதிப்புள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிறு சிறு காயங்களுக்கு கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் ஒரு அவல நிலை வந்தவாசி மருத்துவமனையில் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் வந்தவாசியில் இருந்து போதிய பேருந்து வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட மேல்மருவத்தூர் சென்று அதன் பிறகு தான் செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளது.
மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டவில்லை, மருத்துவமனையில் போதிய உபகரணங்களும் இல்லை. முதல்வரின் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், மக்களை தேடி மருத்துவம், என்று கூறிவரும் நிலையில் மக்களே வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசுகையில் போதிய மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.