(Source: ECI/ABP News/ABP Majha)
மனைவியின் சமாதிக்கு அருகே குழி தோண்டிய கணவர்; தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்..!
தந்தையின் ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் அப்பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர், மனைவியின் சமாதிக்கு அருகில் தனக்கு தானே குழி தோண்டி வைத்துவிட்டு இறந்த பிறகு தன்னை அந்த குழியில் அடக்கம் செய்து விடு என்று தெரிவித்து உயிரிழந்துள்ளார். தந்தையின் ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் அப்பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் தாலுக்கா அடுத்த உள்ள வண்ணான் குளம் காலனியைச் சேர்ந்தவர் குப்பன். இவர் முன்னாள் ராணுவ வீரர், இவருடைய மனைவி சாரதா. இந்த தம்பதியினரின் மகன் பிரபாகரன் ஆவார். வண்ணான் குலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன், காளியம்மாள் இந்த தம்பதியரின் மகனாக குப்பன் கடந்த 1925- ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி அதே கிராமத்தில் பிறந்தார்.
அதனைத் தொடர்ந்து 1942-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றியுள்ள அவர் 1944-ஆம் ஆண்டு, நவம்பர் 4-ஆம் தேதி ராணுவத்தில் எம்இஜி என்ற குழுவில் இணைந்தார். அதன் பிறகு குப்பன் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். பின்னர் அவர் 1962-ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து சொந்த கிராமமான வண்ணாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து வந்துள்ளார். பின்னர் 1990- ஆம் ஆண்டு வண்ணாங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் குப்பன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தன் இன மக்கள் சுடுகாடு இல்லாமல் தவித்து வந்ததை அறிந்த ராணுவ வீரர் குப்பன் அந்த மக்களுக்கு தேவையான சுடுகாடு வசதிக்காக தன்னுடைய 52 சென்ட் சொந்த நிலத்தை தானமாக வண்ணான் குளம் பஞ்சாயத்துக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தான் இவர் மனைவி சாரதா கடந்த 1998-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அப்போது சுடுகாட்டுக்கு தானமாக முன்னாள் ராணுவ வீரர் வழங்கிய இடத்தில் மனைவி சாரதாவின் உடலை புதைத்து அதே இடத்தில் சமாதி ஒன்றையும் குப்பன் கட்டினார். அதற்கு அருகிலேயே தனக்கான ஆறு அடி குழி ஒன்றையும் அப்போதே வெட்டி வைத்துள்ளார். தனக்கு மரணம் நேர்ந்தால் தன்னுடைய மனைவியன் உடல் அருகே வெட்டி வைத்துள்ள குழியில் தன்னுடைய உடலை அடக்கம் செய்து சமாதி கட்ட வேண்டும் என மகன் பிரபாகரனிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த 18-ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர் குப்பன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தன்னுடைய தந்தையின் விருப்பப்படியே தன் தாய் சாரதா சமாதிக்கு அருகில் 25-ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை குப்பன் தோண்டிய குழியில் அவரின் உடலை பிரபாகரன் அடக்கம் செய்தார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய தணையனை வண்ணான் குளம் கிராம மக்களுக்கும் சுற்று பகுதி கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.