ஏலகிரி மலையில் 5000 ஆண்டுக்கு முந்தைய இரும்புக்கால மக்களது பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஏலகிரி மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக்கால மக்களது பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் செல்லும் வழியில் ஒன் ஆர் டூ ரெட்டியூர் என்ற ஊரின் மேற்புறம் ஏலகிரி மலையில் அமைந்துள்ள இயற்கையான மலைக் குகையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியரும் தொல்லியல், வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் பிரபு தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு கால மக்களின் பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளது.
ஏலகிரி மலையின் மங்களம் கிராமத்தில் இருந்து கீழ் புறமாகவும் 102ரெட்டியூரில் இருந்து மேல்புறமாகவும் அமைந்துள்ள குகையில் பாறை ஓவியங்கள் இருப்பதாக உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வனத்துறை அலுவலர்களின் உதவியோடு அந்த இடத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அக்குகையானது 50 நபர்களுக்கு மேல் தங்கும் அளவிற்கு விசாலமாக உள்ளது. குகையின் முகப்பில் மூன்று தொகுதிகளாக பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தமாக 80க்கும் மேற்பட்ட மனித உருவங்கள் விலங்குகளின் மேல் அமர்ந்து ஆயுதங்களோடு போரிடுவது போலவும் சண்டையிடும் மனித உருவங்களின் அருகே கொம்புகளை உடைய அழகிய மான் கூட்டங்கள் குட்டிகளோடு மேய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இன்னொரு தொகுதியில் போரின் வெற்றியை கொண்டாடுவது போல குழந்தைகளோடு நடனமாடக்கூடிய மனிதர்களும் வரையப்பட்டுள்ளன. இனக்குழு தலைவர்களுக்கான மனித உருவங்கள் பிரத்தியேகமாக தலைகளில் அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடுகளும் காட்டப்பட்டுள்ளது. பல்லக்கில் அமர்ந்த ஒரு மனிதனை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போல ஓவியமும் வரைபட்டுள்ளது.
இந்த ஓவியத் தொகுதிகள் அனைத்தும் விலங்குகளை வேட்டையாடுவதில் ஏற்பட்ட சண்டையாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த சண்டையில் வெற்றி பெற்றவர்களது கொண்டாட்ட நிகழ்வும் இன குழு தலைவனை வழக்கில் சுமந்து செல்வது போலவும் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களின் கரங்களில் ஆயுதங்கள் காட்டப்படுவதால் இவை இரும்புக் காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாடாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்றுபட்ட வேலூர் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதியாக இது அமைந்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வழிபடுவதற்காக அக்குகைக்குச் செல்லும் மக்கள் இந்த அரிய பாறை ஓவியங்களைச் சிதைப்பது வேதனை அளிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





















