திருப்பத்தூர்:பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அங்கான்வாடி மைய குழந்தைகள் 5 பேருக்கு வாந்தி மயக்கம்
கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இன்று அங்கன்வாடி மைய பணியாளரால் சமைத்து வழங்கப்பட்ட கலவை சாதமான மதிய உணவை உட்கொண்ட 5 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சம் அடைந்த பெற்றோர் அவசர அவசரமாக குழந்தைகளை உடனடியாக நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு தூக்கிச்சென்று முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஆம்புலன்ஸ் திடீரென வழியில் பழுதாகி நின்றுள்ளது. பின்னர் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆத்திரமடைந்து குழந்தைகளை தூக்கி கொண்டு போய் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் நரியம்பட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அமர குஷ்வாஹா கூறுகையில், நரியம்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான சமையல் செய்த பின் கடைசி நேரத்தில் உணவில் சிறிய பல்லி ஒன்று விழுந்துள்ளது. அச்சமயம் அங்கன்வாடி மையத்தில் 24 குழந்தைகள் உள்ள நிலையில் அங்கிருந்த 5 குழந்தைகள் மட்டும் உணவு உட்கொண்டுள்ளது. உடனே அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் இதே போன்று கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளர்களின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டும் இது போன்ற அவல நிலையால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் சோதனை மேற்கொண்டு தரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )