திருவண்ணாமலை : ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ரெட்டையர் உட்பட 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..
திருவண்ணாமலை அருகே ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு இரட்டை சகோதரிகள் உட்பட 3 பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதிக்கு உட்பட்ட சு.கம்பப்பட்டு கிராமத்தை சோந்தவர் மாபூப்கான். இவர் டேக் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தில்ஷாத். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இவர்களுக்கு நசிரின் வயது மற்றும் நசீமா உள்ளிட்ட இரட்டை பெண் பிள்ளைகள் உட்பட 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இரட்டையர்கள் நசிரின் வயது (15) மற்றும் நசீமா வயது (15) இவர்கள் இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர், இவர்களுடைய தங்கை ஷாகிரா வயது (12) இவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் மூவரும் சு.வாளவெட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் நசிரின்,நசீமா மற்றும் ஷாகிரா மற்றும் ஷபரின் ஆகியோர் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக சு.கம்பப்பட்டு பகுதியில் உள்ள ஏரிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். ஏரியில் இவர்கள் ஆடுகளை குளிப்பாட்டும்பொழுது நசிரின் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டார். சேற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சேற்றில் மூழ்குவதைக் கண்டு நசீமா காப்பாற்றச் சென்றுள்ளார். அப்போது அவரும் சேற்றில் மாட்டிக்கொண்டார். பின்னர் அவரும் சேற்றில் மூழ்கியுள்ளார். பின்னர் சேற்றில் மூழ்குவதை கண்ட ஷாகிராவும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் காப்பாற்ற குட்டையில் குதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஷாகிராவும் சேற்றில் சிக்கி கொண்டு 3 சகோதரிகளும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனை கண்ட தங்கை ஷபரின் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால், அங்கு இருந்து வீட்டிற்கு ஓடிச்சென்று தனது வீட்டில் உள்ள பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். பின்னர் அவருடைய பெற்றோர் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் கூறியுள்ளனர். உடனடியாக கிராமத்தினர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த உடல்களை மீட்டு வெளியே எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வெறையூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெறையூர் காவல்துறையினர் இறந்த மூன்று சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து வெறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டார். ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்த நிகழ்வு அந்த கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது