அங்கன்வாடி குழந்தைகள் உண்ணும் சத்துணவில் பல்லி? 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சாப்பிட்ட சத்துணவில் பல்லி இருந்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில், 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திருப்பத்தூரில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், உணவினை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது சோமலாபுரம். இங்கு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 33 குழந்தைகள் பயின்றுவருகின்றனர். நேற்று (16.11.2021) செவ்வாய்க்கிழமை 17 குழந்தைகள் அந்த அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கன்வாடி ஆசிரியர் அஞ்சலி என்பவர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திய பின்னர், மல்லிகா என்ற சமையலர் சத்துணவைப் பரிமாறியுள்ளார். மதிய உணவு இடைவேளையில், குழந்தைகளுக்கு கலவைச் சாதம் உணவாக வழங்கப்பட்டது.
குழந்தைகளின் வீடுகள் அருகிலேயே இருப்பதால், சிறிய குழந்தைகள் தானாக உண்ணாது என்பதால் சில பெற்றோர்கள் நேரடியாக வந்துவிடுவார்கள். உணவு நேரத்தின்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களாகவே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்படும் உணவைக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டுச் செல்வது வழக்கம். அதன்படி 13 குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஒரு குழந்தையின் தாய், கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைக்கு ஊட்டும்போது அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலியிடமும், சமையலர் மல்லிகாவிடமும் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு ஒரு குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த அனைவரும் குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவா்களுக்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி குழந்தைகள் சாப்பிடும் உணவில் பல்லி விழுந்த செய்தியை கேட்டு மருத்துவமனைக்கு, எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் விரைந்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களைக் கேட்டுக் கொண்டனா். அப்போது, மருத்துவா்களின் கண்காணிப்பில் குழந்தைகள் நலமாக உள்ளதாக மருத்துவ அலுவலா் ஷா்மிளா தெரிவித்தாா். ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்து, சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். எந்த குழந்தைக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றாலும் சத்துணவில் பல்லி இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி உள்ளிட்டோா் அங்கன்வாடி மையத்தில் பணியாளா்களிடமும், அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினா். மேலும் குழந்தைகள் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.