Karthigai Deepam 2022: அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் உற்சவம் - பக்தர்கள் பரவசம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வம் சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி மாடவீதியுலா பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அன்று காலை மற்றும் இரவு விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, உண்ணாமுலை அம்மனுடன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் மாடவீதியுளா நடைப்பெற்ற உள்ளது.
இந்நிகழ்வு 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய விழாவாக வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெள்ளி ரதமும், டிசம்பர் மூன்றாம் தேதி மகாரத தேரோட்டமும் அதனை தொடர்ந்து டிசம்பர் 6-ஆம் தேதி அன்று அதிகாலை 4-மணியளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம்,வெளிநாடுகளில் இருந்து 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது.
தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வமான 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி புறப்பாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்களுக்கு அருள் பாலித்த பிடாரி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே சாமி வீதியுலா நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதியில் பிடாரி அம்மன் வீதி உலா வந்ததால் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்தோடு மாட வீதி முழுவதும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிடாரி அம்மன் வீதியுலாவில் உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

