Crime: 'மாஸ்டர்' பட பாணியில் வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 பேர் தப்பியோட்டம்
வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லதில் இருந்து 7 பேர் தப்பியோட்டம். 2 பிடிபட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த சிறார் ஒருவரை, சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த சிறுவர் பாதுகாப்பு இல்லம் கட்டிய சுவர் மீது ஏறி நின்று, நீண்ட அட்டகாசம் செய்தார். பின்னர், வேலூர் இளஞ்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சிறுவர் கீழே இறங்கி வந்தார்.
இதே போன்று கடந்த மார்ச் 27-ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த அந்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் 6 பேர், பாதுகாப்பு இல்ல ஊழியர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனால், பாதுகாப்பு இல்லத்தின் பாதுகாப்பாளர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறார்கள் தப்பியோடிய சம்பவம் வேலூரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய சிறார்களில் ஐந்து பேர் சிக்கினர். ஒருவர் மட்டும் கிடைக்கவில்லை காவல்துறையினர் தேடிவருகின்றனர். அதனைத்தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி, 12 சிறுவர்கள் தப்பிக்கும் திட்டத்துடன் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள மேஜை, சேர், லைட் என கைக்கு கிடைத்த அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடினர்.
உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது, இல்லம் சுற்றி வளைக்கப்பட்டு, பொருள்களை அடித்து நொறுக்கிய 12 சிறுவர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் இறக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சிக்கிய இதே 12 சிறுவர்கள், ஏப்ரல் 13-ம் தேதி மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறார் கைதிகள் கழிவறையின் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளனர். ஜன்னலை உடைத்து, போர்வையை கயிறாக பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் ஏறி தப்பி ஓடி உள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு இல்லப் பாதுகாவலர்கள் மற்றும் காவல்துறையினர், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் இரண்டு பேர் பெருமுகை அருகே பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் காட்சிகள் போன்று உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார் கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த இரண்டு முறையும் சிறார்கள் தப்பியோடியபோது, காவல்துறையினர் அவர்களை தேடிப்பிடித்து வழக்குப்பதிவு செய்து மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் அடைத்தனர்.