Vinayagar Chaturthi 2023: புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்...
புதுக்கோட்டையில் விநாயகா் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது - மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து ஆங்காங்கே வழிபாடு நடத்தப்படும். மேலும் 3 நாட்களுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது உண்டு. சிலைகள் வைக்க போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சிலைகள் வைக்க அனுமதி கோரி 400 மனுக்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 300 மனுக்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்களை ஆராய்ந்து விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்குவார்கள். இதற்கிடையே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலையை புதுக்குளம் கரையில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலையை ஊர்வலமாக கரைக்க எடுத்து வரும் போது குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், விநாயகர் ஊர்வலத்தை கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார். மேலும், அதன்படி திருவப்பூர், பி.எல்.ஏ. ரவுண்டானா, கே.கே.சி. கல்லூரி சாலை, பழைய பஸ் நிலையம், கீழ ராஜவீதி, திலகர் திடல், பழனியப்பா கார்னர், மச்சுவாடி, சின்னப்பா பூங்கா ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்கள் நடக்காமல் கண்காணிப்பதற்கு புதுக்கோட்டை உட்கோட்டத்தில் மொத்தம் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திறந்து வைத்தார்.
மேலும், சிலையை கரைத்த பின் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து யாரும் பயணிக்க கூடாது. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி விழா நிர்வாகிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது, அதன்வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்ளபட்டுள்ளது.