Trichy | சேவைக்கு கிடைத்த பெருமை...தேசியக்கொடி ஏற்றிய 108 பெண் ஊழியர்
திருச்சி, மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 108 ஆம்புலன்ஸ் பெண் மருத்துவ உதவியாளர் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
திருச்சி, மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 108 ஆம்புலன்ஸ் பெண் மருத்துவ உதவியாளர் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
இதற்குப் பின்னணியில் உள்ள காரணம் குறித்து நெகிழ்ச்சியுடன் விவரித்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்.
''சமூகம் சார்ந்த சேவைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னால், மணப்பாறை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வயதான பெரியவரைப் பார்த்தேன். பொத்த மேட்டுப்பட்டி பாலத்துக்குக் கீழே வந்தவர் நடக்க முடியாமல் தன்னுடைய கால்களை இழுத்து இழுத்து வந்தார். அருகில் இருந்தவர் அந்தப் பெரியவருக்கு உணவை வாங்கிக் கொடுத்தார். எனினும் அந்த இடத்தில் யாருமே நிற்க முடியாத அளவுக்கு, அவரின் கால்களில் இருந்து துர்நாற்றம் கடுமையாக வீசியது.
அவசர கால உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்து பேசினேன். மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து டெய்ஸி க்ளாரா என்னும் மருத்துவ உதவியாளர் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர்களை நான்தான் வரச்சொன்னேன் என்றாலும், துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பவரை அழைத்துச் செல்ல, ஒரு பெண்ணை வருமாறு அழைத்தது உள்ளுக்குள் உறுத்தலாக இருந்தது.
நெளிந்த புழுக்கள்
'என்னை மன்னித்து விடுங்கள்' என்று டெய்ஸியிடம் கூறினேன். ஆனால் அதை மென்மையாக மறுத்த டெய்ஸி, 'யாருக்கு வேண்டுமென்றாலும் உதவலாம். ஆனால் இதுபோல் இருப்போருக்குத்தான் முதலில் உதவ வேண்டும்' என்று கூறினார். அந்த முதியவர் சாப்பிடும்வரை காத்திருந்தார். தொடர்ந்து டெய்ஸி காலைச் சுத்தம் செய்ய முன்வந்தபோது, கடுமையான துர்நாற்றத்துடன் அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
ஒரு வினாடி முகம் திரும்பியவர், மீண்டும் வேகமாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு, டெட்டாயில் கொண்டு சுத்தம் செய்தார். உடனடியாக முதியவரை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தோம். குணமானவரைத் தற்போது மனநலக் காப்பகத்தில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்.
மருத்துவ உதவியாளர் டெய்ஸி கிளாராவை இரண்டு காரணங்களுக்காகப் பள்ளியில் குடியரசு தினத்தன்று கொடியேற்ற வைத்தேன் என்கிறார் ராஜசேகரன். ''முதலாவதாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட டெய்ஸி கிளாராவுக்கு, வெறுமனே ஒரு நன்றியைச் சொல்லிக் கடந்துவிடக் கூடாது. கவுரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால் பொது மக்களும் கலந்துகொண்ட பள்ளி குடியரசு தின விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தேன்.
அறம் செய்
இரண்டாவதாக, எங்களின் மாணவர்களுக்கு மனிதநேயத்தைக் காண்பிக்க ஆசைப்பட்டேன். ஏற்கெனவே எங்கள் பள்ளியில் 'அறம் செய்' என்றொரு பெட்டியை வைத்துள்ளோம். அதில் மாணவர்கள் செய்யும் ஒவ்வோர் உதவியையும் எழுதி போடவேண்டும். வாரத்துக்கு ஒருமுறை அந்தப் பெட்டி திறக்கப்பட்டு, மாணவர்கள் செய்த உதவிகள் வாசிக்கப்படும். குறிப்பாக எல்லோரின் முன்னிலையிலும் அதை வாசித்து, அவர்களுக்கு இனிப்பு, பென்சில் உள்ளிட்ட சிறப்புப் பரிசுகளை வழங்குகிறோம்.
டெய்ஸி க்ளாரா கொடியேற்றியதை அடுத்து, லயன்ஸ் க்ளப், ஜேசிஐ அமைப்புகளும் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தன'' என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்.
அங்கீகாரம் தேடாத அரிய சேவைக்கு எடுத்துக்காட்டாக டெய்ஸியும், உண்மையான மக்கள் சேவைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு எடுத்துக்காட்டாக சமுத்திரம் அரசுப் பள்ளியும் என்றென்றும் நினைவு கூறப்படுவர்.