திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளியை சூறையாடிய மக்கள் - நடந்தது என்ன?
பெற்றோரும், உறவினர்களும் வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் பள்ளியை அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு உருவானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்ற 4ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்றுள்ளார். மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்தபோது அந்த மாணவியிடம் பள்ளி அறங்காவலரும், தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பிரமை பிடித்தது போல் இருந்துள்ளார். பின்னர் பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த வசந்தகுமார் மாணவியின் பெற்றோரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொடர்ந்து பெற்றோரும், உறவினர்களும் வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கி கவிழ்த்து விட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பள்ளி அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திருச்சி எஸ்.பி., மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்மந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகிறோம். பள்ளியில் இதுபோன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஒரு சம்பவம் மட்டும்தான் நடந்துள்ளதா? வேறு ஏதேனும் குற்றட்சாட்டுகள் உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

