திருச்சிக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! SDAT பதில் என்ன?
கிரிக்கெட் மைதானம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டால், அரசு பரிசீலிக்கும் என்று SDAT தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாக்டர். எம்.ஏ.அலீம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவுக்கு SDAT பதில் அளித்து உள்ளது.

தஞ்சாவூர்: சென்னைக்கு நிகராக மாற்றம் பெற்று வரும் திருச்சிக்கு ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவும் அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு நிகராக திருச்சியில் ஏராளமாக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், டைடல்பார்க், புதிய மேம்பாலங்கள் என்று திருச்சியின் நிறம் வண்ணமயமாக, தொழில்வளர்ச்சியில் முன்னேறும் விதமாக பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. வந்து கொண்டும் இருக்கிறது வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்து வருகிறது. இதற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? கிரிக்கெட் மைதானம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டால், அரசு பரிசீலிக்கும் என்று SDAT தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாக்டர். எம்.ஏ.அலீம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவுக்கு SDAT பதில் அளித்து உள்ளது.
கோயம்புத்தூரில் 28 ஏக்கரில் மைதானம் அமைக்க திட்டம் உள்ளது. அதேபோல், திருச்சியிலும் நிலம் கிடைத்தால் மைதானம் கட்டலாம். நிலம் கிடைத்ததும், விரிவான அறிக்கை தயாரிக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சிறிய மைதானம் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. திருச்சியில் நிலம் ஒதுக்கப்பட்டால், சிறிய மைதானம் கட்டவும் பரிசீலிக்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அலீம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு கோரிக்கை விடுத்து இருந்தார். திருச்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இதற்கு SDAT பதில் அளித்துள்ளது. அதில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலம் ஒதுக்கப்பட்டால், அரசு மைதானம் கட்ட பரிசீலிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு நிலம் ஒதுக்கப்பட்டால், அந்த திட்டத்தையும் பரிசீலிக்கலாம். எனவே, திருச்சிக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் வருமா என்பதே தற்போதையை பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏற்கனவே திருச்சியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், ஒலிம்பிக் அகாடமி, பஞ்சப்பூரில் டைடல் பார்க், காய்கறி மைதானம், கனரக வாகன சரக்கு முனையம் என வரும் நாட்களில் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு இருக்கும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டால் திருச்சியின் தரம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டால் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் முக்கிய இடத்தை பிடிக்கும். ஏற்கனவே ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படுவதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து அடியெடுத்து வைத்து வரும் சூழலில் இது போன்ற சர்வதேச திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் அடியெடுத்து வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் நிலம் கிடைத்தால் கண்டிப்பாக அமைக்கப்படும் என்று அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.





















