அழியும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க பூங்கா - சீரமைக்க திருச்சி மக்கள் கோரிக்கை..!
திருச்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பசுமை நிறைந்த விக்டோரியா பூங்கா பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாநகரில் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய இடங்கள் சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை பகுதியாகும். திருச்சியை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க விஷயங்களை விட்டு சென்றுள்ளனர். அதில் முக்கியமானது இந்த விக்டோரியா பூங்கா ஆகும். திருச்சி மாவட்டத்தை அப்போது ஆட்சி செய்த மாவட்ட ஆட்சியர் ஷிப்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த பூங்கா. திருச்சி மாநகரில் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட முதல் பூங்கா என்ற சிறப்பையும் இந்த பூங்கா பெற்றுள்ளது. தொடக்க காலத்தில் மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்தி வந்தனர். பின்பு காலப்போக்கில் பூங்காவை மேம்படுத்துவதற்காக வெளிநாடுகளில் வளரக் கூடிய அற்புதமான மரங்களை கொண்டு வந்து இந்த பூங்காவில் வளர்த்தனர். இதனால் அந்த பூங்கா முழுவதும் இயற்கை சூழலை தன்வசம் கொண்டது. மிக உயரமான மரங்கள் இயற்கை சூழலை காண்பதற்காகவே மக்கள் அதிக அளவில் தங்கள் குடும்பத்துடன் பூங்காவை பயன்படுத்த தொடங்கினார்கள். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது மலைக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் சிங்காரத்தோப்பு இவற்றுக்கெல்லாம் முதன்மையாகவும் சிறப்பாகவும் இருந்ததுதான். இந்த பூங்கா இதன் பெயரை சொன்னாலே தெரியாத மக்கள் இல்லை ஆனால் காலப்போக்கில் இந்த பூங்கா அழிவுற்று மக்கள் நடமாட்டம் இல்லாத அளவிற்கு மாறியுள்ளது என்றனர்.
மேலும் தொடக்க காலத்தில் மிக உயரமான மரங்களை பார்ப்பதற்காகவும் அந்த இயற்கை சூழலில் மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது உடலில் ஒரு புத்துணர்ச்சியையும் மண மகிழ்ச்சியும் தரக் கூடிய அளவிற்கு இந்த பூங்கா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இந்த பூங்கா சில ஆண்டுகளே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. பின்பு காலப்போக்கில் இப்படி ஒரு பூங்கா இருப்பதே இந்த பகுதி மக்கள் மறக்கும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது என வருத்தத்துடன் தெரிவித்தனர். குறிப்பாக 80 ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் தலைநிமிர்ந்து இயற்கை சூழலை தன் வசம் கொண்டு உள்ள மரங்கள் காண்பதற்காகவே ஒரு சில மக்கள் இன்றளவும் சென்று வருகிறார்கள். ஆனால் குடும்பத்துடன் செல்வதற்கு ஒரு அச்சமான சூழ்நிலை நிலவுகிறது என தெரிவிக்கின்றனர். திருச்சி மாநகராட்சி ஆக மாற்றப்பட்ட பிறகு இந்த பூங்காவை சரியாக பராமரிக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள். முன்பு ஒரு காலத்தில் இந்த பூங்காவிற்கு சென்றாலே இதன் இயற்கைச் சூழல் மற்றும் இலைகளின் வாசனையானது நமது மனதிற்கு ஒரு இதமான உணர்வை அளிக்கும். ஆனால் தற்போது இந்த பூங்காவானது கேட்பாரற்று கிடக்கிறது.
பூங்கா உள்ளே சென்றால் குப்பையும் , மதுபான பாட்டில்களும்தான் நிறைந்து கிடக்கின்றது. இந்தக் குப்பைகளின் காரணத்தினால் சில விஷ பூச்சிகள், பாம்புகள், பூரான்கள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் சுற்றியும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள். ஆகையால் திருச்சி மாநகரின் முதன்முதலாக உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த பூங்காவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து, சீரமைத்து மேம்படுத்தவேண்டும் என்றும், விரைவில் பூங்காவை மக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் விட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்