குழந்தை கடத்தல் தொடார்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை - எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள், வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்கள் பதிவு செய்வது, சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை சிலர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையின் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவது சம்மந்தமாக வதந்திகள் விஷமிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இதனை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிடுகின்றனர். இத்தகைய, குழந்தை கடத்துவது சம்மந்தமான செய்திகளால், பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்குவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்குகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்ததாவது:
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வரப்பெற்ற குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள்:
கடந்த 28.01.2024-ம் தேதி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கன் காலனியை சேர்ந்த சிறுமி தன்னை ஒரு கும்பல் காரில் கடத்தியதாகவும், பின்னர் சிறிது தூரத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும், கூறியதன் பேரில், விசாரணை மேற்கொண்டு, CCTV பதிவுகளை ஆராய்ந்தபோது, சிறுமி கூறியது போல் எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை என தெரியவந்தது.
மேலும், (07.03.2024), முசிறி உட்கோட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பிடாரமங்கலம் பகுதியில் 6ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் பள்ளி முடிந்து, பிடாரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது, தன்னை ஆட்டோவில் வந்த நபர்கள் கடத்தியதாக கூறிய தகவலை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, மேற்படி சிறுவன் பள்ளி முடித்து, தனது நண்பர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று (08.03.2024) திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காட்டூர் பகுதியில், 14 வயது மாணவன் இன்று காலை பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் மதியம் 12.20 மணிக்கு பள்ளிக்கு நடந்து புறப்பட்டு சென்ற பொழுது புர்கா அணிந்த இரண்டு நபர்கள் தன்னை கடத்த முயற்சி செய்ததாகவும், தான் ஒருவர் தோளை கடித்துபோது தன்னை ரோட்டில் தூக்கி எறிந்து விட்டதாகவும் தான் தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் 100-க்கு போன் செய்து கூறியுள்ளார். பின்னர். காவல்துறையினர் சம்பவஇடம் சென்று. விசாரணை செய்து, மேற்படி சாலையில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், சிறுவன் கூறியது போல் எதுவும் நடைபெறவில்லை என தெரிகிறது.
மேற்படி, மூன்று சம்பவங்களிலும், குழந்தைகள் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியதையடுத்து, அவர்களது வயதை காரணம் காட்டி, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளாமல், அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டனர். எனவே, திருச்சி மாவட்டத்தில் இது போன்று குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் இது போன்று வதந்திகள் பரப்புவோர் மீது புகார்கள் வந்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.