![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வடமாநிலத்தவர் குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - திருச்சி எஸ்பி எச்சரிக்கை
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டங்களின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை
![வடமாநிலத்தவர் குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - திருச்சி எஸ்பி எச்சரிக்கை Trichy District SP Varun Kumar warns Strict action will be taken against spreading false information on social media - TNN வடமாநிலத்தவர் குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - திருச்சி எஸ்பி எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/618daaca3a24062941a124a76097d86f1709868899370184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எஸ்பி வருண்குமார் கூறியதாவது: சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் வதந்திகள் மிக வேகமாக பரவுகிறது. உண்மையைவிட பொய்கள் மிக வேகமாக பரவுகிறது. குழந்தை கடத்தல் குறித்த வதந்திகள் தற்போது அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் போலீசாரின் கடமை. என்னுடைய இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கம் மற்றும் முகநூல் பக்கங்களிலேயே எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தனது குழந்தைகளுக்கு அபாயம் எனக்கூறும் குரல் பதிவுகள், குறுஞ்செய்திகள் பதிவிட்டுள்ளனர். முகாந்திரம் இல்லாமல் மக்கள் மத்தியில் வட மாநிலத்தவர் குறித்தும், அவர்கள் குழந்தைகளை கடத்துவதாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற எந்த சூழலும் திருச்சி மாவட்டத்தில் இல்லை. திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்தின் அருகாமை மாவட்டங்களில் விவசாயம், கோழிப்பண்ணைகள், அரிசி ஆலைகள் மற்றும் கட்டிடப்பணிகளில் ஏராளமான வட மாநிலத்தவர் வேலை பார்த்து வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
நான் வெளி மாவட்டத்தில் பணியாற்றியபோது, குழந்தை கடத்த வந்ததாக தவறாக புரிந்து கொண்டு ஒரு வடமாநிலத்தவரை மக்கள் அடித்தே கொலை செய்துவிட்டனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு செய்யப்பட்டது. தவறான புரிதலால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. ஒருவர் விலாசம் தெரியாமல் கூட தவறுதலாக உங்கள் பகுதிக்கு வந்திருக்கலாம். எனவே பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (அவசர போலீஸ் எண் 100) போன் செய்ய வேண்டும். போலீசார் தகவல் கிடைத்த அடுத்த 10 நிமிடத்தில் சம்பவம் இடம் வந்து சேர்ந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குறித்து வதந்திகள் பரப்புவது கடும் குற்றம். வதந்திகள் பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் சைபர் க்ரைம் போலீசார் இதுகுறித்து தீவிரமாக கண்காணிக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய பெண், தான் கடத்தப்பட்டதாக அவர்கள் வீட்டினருக்கு ஒரு குரல் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அது போலியான செய்தி என்பது தெரியவந்தது. நாடு முழுவதும் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. நான் முன்னர் பணியாற்றிய மாவட்டத்தில் 9 பேர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியால் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அது வதந்தி என்பதை போலீசார் கண்டறிந்து, வதந்தியை பரப்பியவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட கோயில் இடிக்கப்பட்டதாக பொய் செய்தி பரப்பிய ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் மீதும், பள்ளி மாணவிகள் மது அருந்துவது போன்ற காணொளி ஒன்றை பதிவிட்ட பெண் ஒருவர் என இருவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் போலியான முகவரியை உருவாக்கி தவறான செய்திகளை பரப்புபவர்கள் கண்டிப்பாக கண்டறியப்படுவார்கள். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். வக்கிர குணம் படைத்தவர்கள், தாங்கள் இந்த சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக நினைத்து இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். எனவே வதந்திகள் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி வருண்குமார் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)