திருச்சி அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் அதிரடி கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நடைபெற்ற கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (53). இவர் எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு திருமண டெகரேஷன் காண்ட்ராக்டரிடம் மேலாளராக தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணுடன், ராதாகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் சரவணனுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி மது அருந்தி கொண்டிருந்தபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரவணனை ராதாகிருஷ்ணன் கொலை செய்தார். அந்த வழக்கில் சிறையில் இருந்த ராதாகிருஷ்ணன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து உள்ளார்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு கையெழுத்துயிட்ட ராதாகிருஷ்ணன் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 16ம் தேதி திருவெறும்பூர் அருகேஉள்ள கக்கன் காலனி பாரில் மது அருந்தி உள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் திருவெறும்பூர் மேலகுமரசபுரத்தை சேர்ந்த பிரவின், அதே பகுதியை சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் அந்தப் பாரில் மது அருந்தி கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது ராதாகிருஷ்ணன் தன்னை கீழ குமரேசபுரத்தில் கொண்டு போய் விடுமாறு கூறியதாகவும், அதன் அடிப்படையில் பிரவீன் சேதுபதியும் ராதாகிருஷ்ணனை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெல் மனமகிழ் மன்றம் அருகே சென்ற பொழுது போதையில் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்பொழுது ராதாகிருஷ்ணனை இருவரும் தாக்கி உள்ளனர்.
மேலும், ராதாகிருஷ்ணனை அங்கேயே இறக்கி விட்டு விட்டு சேதுபதியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டு தனது நண்பர் கீழ குமரேச பிரதேசத்தை சேர்ந்த கீர்த்தி வாசனை அழைத்துக் கொண்டுவந்து, ராதாகிருஷ்ணனை மறுபடியும் தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற பொழுது, கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சென்ற போது மீண்டும் ராதாகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ததால், அவரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் கீழே விழுந்ததில் தலையிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 17ஆம் தேதி காலை சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்நிலையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உடலில் காயத்துடன் இறந்தது குறித்து ராதாகிருஷ்ணனின் உறவினரான லால்குடி பரமசிவ புரத்தை சேர்ந்த கணேஷ் (35) என்பவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரவீன், சேது, கீர்த்தி வாசன் ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தப் போது அவர்கள் மூன்று பேரும் ராதாகிருஷ்ணனை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்த பொழுது ராதாகிருஷ்ணனுக்கும் அவர்களுக்கும் குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியதாகவும் அப்பொழுது ராதாகிருஷ்ணனை முகத்தில் குத்தி தாக்கியதால் அதில் முகத்தில் காயமடைந்ததாகவும் அப்படி தாக்கிய பொழுது ராதாகிருஷ்ணனை கீழே தள்ளியதாகவும் அதில் தலையில் அடிபட்டது என்றும் போதையில் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் நான்கு நாட்களாக கொலையா விபத்தா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது கொலை வழக்காக மாற்றி மூன்று பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.