திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு...!
’’திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட மாநகராட்சி சார்பாக பூங்காகள், நடைபாதைகள் அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல் சிதைந்து போய் உள்ளது’’
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே மண்டை ஓடுகள், 2 மூட்டை எலும்புகள் மீட்க்கபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு பொழுது போக்கும் விதமாக பசுமை பூங்காக்கள், ஏற்கனவே உள்ள பூங்காகளை சீர்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளுதல், மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள். இதில் திருச்சி, மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே பிரதான சாலையில் அமைந்துள்ளது மாநகராட்சி பசுமை பூங்கா.
இந்த பூங்காக்களில் தினந்தோறும் பலர் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள், குறிப்பாக அவ்வழியே வாகனத்தில் செல்பவர்கள் கூட சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இந்த பூங்காவில் சுற்றுச்சுவர் அருகே மனித மண்டை ஓடு மற்றும் இரண்டு மூட்டை கட்டப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் கிடப்பதாக பகுதி பொதுமக்கள் எ.புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது 8 மணித மண்டை ஓடுகள், 2 மூட்டை மனித எலும்புகள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருச்சியில் கடந்த சில நாட்களாக சில காணவில்லை என புகார்கள் வந்துள்ளது, இதனை தொடர்ந்து மண்டை ஓடுகள், எலும்புகள் அனைத்தையும் மீட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த எலும்புகள் , மண்டை ஓடுகள், காணமல் போனவர்களுடையதா, இல்லை கொலை செய்து அவர்களின் உடல்களை மறைத்து வைக்கபட்டதா மேலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மயானத்தில் இருந்து எலும்புகளை எடுத்துவந்து சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே மனிதனின் மண்டை ஓடுகள் மற்றும் இரண்டு மூட்டைகளில் எலும்புகள் அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பாக பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல் சிதைந்து போய் உள்ளது மாநகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலை இருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல பூங்காக்கள் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது, குறிப்பாக இரவு நேரத்தில் பல குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு முக்கிய இடமாகவும் மாறிவிட்டது. இதனை தொடர்ந்து தான் பசுமை பூங்கா அருகே மனித எலும்புக்கூடுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பூங்காக்களிலும் சீரமைத்து சுத்தம் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.