டெல்டா பகுதியில் விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்
டெல்டா பகுதிகளில் 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவுத்துறையின் சாதனையாக ஒரே நாளில் 51,307 மெட்ரிக் டன் நெல் கொள்முதல், 2,277 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் செய்யப்பட்டது. மேலும் 2021-22-ம் ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 292 கோடி கடன் வழங்கிவுள்ளோம். இந்த ஆண்டில் தற்போது வரை 15 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 10 கோடி கடன் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 18 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கு ரூ.1,486 கோடியும், டெல்டா பகுதிகளில் 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கூட்டுறவுத்துறையின் மூலம் கால்நடை, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போர்களுக்கு கடந்த ஆண்டு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக நடப்பாண்டில் 2 லட்சத்து 48 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,130 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 14 லட்சத்து 53 ஆயிரம் ேபர் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். அதில் 13 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படவுள்ளது என்று கூறினார். இதைத்தொடர்ந்து, அதவத்தூரில் அமைக்கப்பட்டுள்ள 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்