Pudukottai Govt School: அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லை - வெட்ட வெளியில் படிக்கும் மாணவர்கள்..!
புதுக்கோட்டையில் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டிட வசதி இல்லாததால் அவதி அடைந்து வருவதோடு, மாற்று கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் கடந்த 13-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. கடந்த கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் சிலர் பொருளாதார நிலை கருதி தங்களது குழந்தைகளை அங்கிருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினர். தற்போது நிலைமை சீரானதால் சில பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாற்றி வருவதாக ஆசிரியர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதி அல்லது பள்ளியில் நல்ல முறையில் நடைபெறும் வகுப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருகின்றனர். அவ்வாறு 1 முதல் 8, 9-ம் வகுப்புகளில் சேர்க்கப்படும் போது அவர்களுக்கான வகுப்பறைகள் போதுமானதாக இல்லாமல் உள்ளது.
மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாற்று கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது. புதுக்கோட்டை நகரில் அரசு உயர் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் கட்டிட வசதி இல்லாததால் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்பறை பக்கத்தில் உள்ள நகர்மன்ற கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. நகர்மன்றத்தில் நடைபெறும் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறைகள் போன்ற போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் நகர்மன்றத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நடைபெற்று வரும் வகுப்பறைகள் அடுத்து எங்கு நடைபெறும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளிக்கு தேவையான கட்டிட வசதியை ஏற்படுத்தி தருகிறோம் என அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தாலும் கிடப்பில் போடப்பட்ட உறுதியாகவே இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு போதுமான வசதி இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் புலம்பி வருகின்றனர். தங்களது சொந்த முயற்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக நடவடிக்கை எடுத்து சமாளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்ததால் வகுப்பறைக்கு ஏற்றவகையில் மாணவர்களை சேர்த்துள்ளனர். மேலும் மாணவர்களை சேர்க்க போதுமான இடவசதி இல்லை என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஏற்ப வகுப்பறைகள் கட்டிட வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தற்போது முன்கூட்டியே அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்