திருமாவளவன் பற்றி அவதூறு பதிவு; நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு, பதிவை பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு .
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் முக்கிய நபர்கள், அரசியல் பிரமுகர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என சிலரை பற்றி, சில அமைப்பை சேர்ந்தவர்கள் மிகவும் ஆபாசமாக அவதூறுகளை பரப்பும் வகையில் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
அண்மையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி ஆபாசமாகவும், மோசமாகவும், தவறான தகவல்களை எக்ஸ் தளத்தில் சிலர் பதிவிட்டு இருந்தனர்.
இதுகுறித்து எஸ்பி. வருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தவறான பதிவுகளை பதிவிட்ட X -ஐ கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகளை கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், வி.சி.க-வை சேர்ந்த ஸ்நேகா என்ற பெண்ணையும். மற்றுமொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் விதமாகவும், மற்றும் திருமாவளவன் ஒரு பெண் நிற்பது போன்ற புகைப்படத்தை, ஆபாசமாகவும் அருவருக்கதக்க வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இந்தகைய பதிவுகளை பதிவிடுவதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, பொது அமைதியை, குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ளனர். ஆகையால் அவதூறு பரப்பிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழாதன் (எ) கமலதுரை என்பவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகார் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து விசாரணை மேக்கொண்ட போலீஸ் கூறிய தகவல்... புகாரின் அடிப்படையில் X Page-ஐ பற்றி விசாரித்த போது, சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திப்ரியா என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் கனடாவில் இருந்து கொண்டு செல்வகாந்தன் மற்றும் மனைவி சாந்திபிரியா செய்து வருகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு
மேலும், இவர்கள் இருவரும் X Page-ல் பல அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டது தெரிந்தது.
குறிப்பாக சாந்திபிரியா இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு போலியாக இந்தியன் Passport தயார் செய்து கொடுத்து, அவரை கனடா நாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செல்வகாந்தன் அனுப்பியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பக இருவரும் விசிக தலைவர் தொல் திருமாவளவன், பட்டியிலினத்தவர் என்று தெரிந்தும் உள் நோக்கத்துடன், அவரையும், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளனர்.
விசிக கட்சிக்கும் மற்ற அமைப்புகளுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆகையால் ஆபாச பதிவுகளை பதிவு செய்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திபிரியா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டுள்ளது.