திருச்சி மாவட்டத்தில் ரூ. 87.39 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், முசிறி, இலால்குடி ஆகிய பகுதிகளில் ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், முசிறி, இலால்குடி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ரூபாய் 87.39 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விபரம் பின்வருமாறு: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சித்தாம்பூரில் நபார்டு 2023-2024 திட்டத்தின் கீழ் சித்தாம்பூர் ஊராட்சி அய்யாற்றின் குறுக்கே சித்தாம்பூர் கொடுந்துரை சாலையில் ரூபாய் 8.52 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியையும், மண்ணச்சநல்லூர் வட்டம், கோவத்தக்குடியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூபாய் 74.23 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால்களை புனரமைத்து மற்றும் நவீனப்படுத்தும் பணியினையும், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், வந்தலை கூடலூரில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4.03 கோடி மதிப்பீட்டில் வந்தலை கூடலூர் வந்தலை சாலையில் பாலம் கட்டும் பணியினையும், காணக்கிளியநல்லூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 60.14 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவயலூர் முதல் தாப்பாய் வரை அமைக்கபடவுள்ள சாலை பணிகள் என மொத்தம் ரூபாய் 87.39 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொனலை ஊராட்சி மன்றக் கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். முன்னதாக, திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், காணக்கிளியநல்லூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.சௌந்தரபாண்டியன், திரு.நா.தியாகராஜன் திரு.எம்.பழனியாண்டி, திரு.சீ.கதிரவன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தேவநாதன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.த.ராஜேந்திரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் திரு.முருகானந்தம், துணை பதிவுத்துறை தலைவர் திரு.இரா.ராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் திரு.சுரேஷ்குமார், மாவட்ட பதிவாளர்கள் திரு.எம்.ராஜா (நிர்வாகம்), திரு.கார்த்திகேயன், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.துரைராஜ், புள்ளம்பாடி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.ரசியாகோல்டன் ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ஸ்ரீதர், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் திரு.க.வைரமணி, பதிவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.