'நீட் ரிசல்ட் என்றதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருந்தேன்' - அமைச்சர் அன்பில் மகேஷ்!
பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம், நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளார்களை சந்தித்த போது கூறியதாவது... சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கக்கூடாது என்பது முதல்வரின் கொள்கையாக இருக்கின்றது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். ஆகவே இலவசங்களை நாங்கள் சமூக நீதியாக தான் பார்க்கின்றோம். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி.. @Anbil_Mahesh @abpnadu #NEETresult2022 pic.twitter.com/HK2cAGFXKC
— Dheepan M R (@mrdheepan) September 8, 2022
மேலும் மாணவர்களுக்கு மனரீதியாகவும், கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஹெல்ப்லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை. நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கின்றோம்.
சமீபத்தில் கேரளா வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார். மேலும் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ளது என தகவல் வந்தவுடன் நான் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன் ஏன் என்றால் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்களோ என அச்சத்தில் இருந்தேன் என்றார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் போதைப்பொருட்களால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கபட்டு வருகிறார்கள். இவற்றை முற்றிலுமாக கட்டுபடுத்த தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பள்ளி வளாங்களில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினர், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.