மின்சாரம் தாக்கி இதயதுடிப்பு நின்ற சிறுமிக்கு மீண்டும் உயிர்கொடுத்த அரசு மருத்துவர்கள்
3 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில் டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 5 முறை ஷாக் கொடுத்துள்ளார்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா (12). இவர் அந்த பகுதியில் விளையாட்டிக்கொண்டிருந்த போது மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்துள்ளார். அப்போது மின்கம்ப எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், மின்சாரம் தாக்கப்பட்ட சிறுமி தீபிகா துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மரக்கட்டை உதவியுடன் சிறுமியை அங்கிருந்து மீட்டு பார்த்த போது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தது. உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு பதறி அடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அரசு மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுமியின் நெஞ்சை கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் சிறுமி சலனமற்று கிடந்ததால், ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்தனர். டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 3 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில் டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 5 முறை ஷாக் கொடுத்துள்ளார். ஆச்சர்யப்பட தக்க வகையில் சிறுமி மூச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு மூக்கு வழியாக நுரையீரல் ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர் மயக்கவியல் மருத்துவர் பிரபாகரன். அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் நின்றுப் போன இதயத்தை துடிக்க வைத்த லால்குடி அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் வியக்கதக்க சிகிச்சை, ஓட்டு மொத்த அரசு மருத்துவர்களையும் நெஞ்சார பாராட்டும் வகையில் இருக்கிறது.
தொடர்கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் வயல்வெளிகளில் வெள்ள நீர் அதிக அளவில் சூந்துள்ளது. மேலும் அருகில் உள்ள பகுதிகளில் ஏரி, குளங்கள் அனைத்தும் முழுக்கொள்ளளவை எட்டியது, அதனால் அங்கிருந்து வெளியேரும் தண்ணீரால் மக்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் வெள்ளகாடாக மாறியது. இதனால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிபட்டு வருகிறார்கள். ஓரிநாட்களாக மழை பெய்யாமல் இருந்தாலும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் இருக்கிறது. குறிப்பாக மின்கம்பங்கள் அனைத்து சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் பலமுறை கால்நடைகள் உயிர் இழப்பு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு பல முறை புகார்கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லை. மின்கம்பங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உடனடியாக மின்கம்பங்கள் சீரமைப்பு செய்வது, மழை நீரை அகற்றும் பணி என மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.