திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை - டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்
திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் யாகப்புடையான்பட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனே காவல்துறை இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பரிவு துணை காவல் சூப்பிரண்டு முத்தரசன், இன்ஸ்பெக்டர் மீராபாய் குழுவினருடன் நேற்று இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் போலி மதுபானம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 1,500 மதுபாட்டில்கள், 3 பேரல்களில் 150 லிட்டர் மதுபானம், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், டாஸ்மாக் மது சரக்குகளின் போலி லேபிள்கள், எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் 5 பேரை காவல்துறையினர் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் காரைக்கால் கீழ காசாக்குடி பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற காரைக்கால் கார்த்தி (33), திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த வெற்றி செல்வன் (24), விஜயகுமார் (23), சூரியா (24), பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது.
மேலும் இதில் கார்த்தி மேற்கண்ட போலி மதுபான ஆலையை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இங்கு ஆரம்பித்துள்ளார். மற்ற 4 பேரும் ஆலையில் வேலை செய்துள்ளனர். வெற்றிச்செல்வனும், விஜயகுமாரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். போலி மதுபான ஆலை நடத்திய பலே ஆசாமி கார்த்தி மீது ஏற்கனவே நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலி மதுபான ஆலை நடத்தியதாக வழக்குகள் உள்ளன. ஜாமீனில் இருக்கும் அவர் இடத்தை திருச்சிக்கு மாற்றி ஆலையை நடத்தியுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எரிசாராயம், லேபிள்கள் போன்ற மூலப்பொருட்கள் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்துள்ளனர். இந்த போலி மதுபான பாட்டில்கள் திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டதா? என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாக இன்ஸ்பெக்டர் மீராபாய் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, டாஸ்மாக் மதுபான கடைகளில் இதுவரை போலி மதுபானம் விற்கப்படவில்லை. புகாரும் வரவில்லை. இதுவரை கடைகளில் போலி மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்படவும் இல்லை. திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை சீராக உள்ளது. விடுமுறை நாட்களில் ரூ.6 கோடி அளவிலும், மற்ற நாட்களில் 4 முதல் 4 அரை கோடிக்கும் விற்பனை நடக்கிறது. கடைகளின் சராசரி விற்பனையை கண்காணித்து வருகிறோம். அதில் இதுவரை தவறு ஏதும் நடக்கவில்லை என்றனர். இருந்தபோதிலும் கைதான இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரகசியமாக வேறு எங்காவது இதேபோல் வாடகைக்கு வீட்டை பிடித்து போலியான மது வகைகளை தயாரித்து வருகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடிக்கும் குடிமகன்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.