ஈரோட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை மீட்பு - மதிப்பு 33 கோடி ரூபாய்
சுமார் ரூ.33 கோடி மதிப்பிலான 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் உலோக சிலை மீட்பு .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆர்.எஸ்.பழனிச்சாமி. இவரது வீட்டில் சுமார் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன், தலைமைக் காவலர் பரமசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோபிசெட்டிபாளையம் விரைந்து சென்றனர். பின்னர் ஆர்.எஸ்.பழனிச்சாமியிடம் சிலை இருப்பதை உறுதி செய்தனர். அதனைத்தொடர்ந்து தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமியிடம் பேரம் பேசினர். அப்போது அந்த நபர் அந்த சிலைக்கு ரூ.33 கோடி விலை கேட்டார்.
பழமையான ரூ.33 கோடி மதிப்பிலான பெருமாள் உலோக சிலை மீட்பு .@abpnadu #Trichydistrict pic.twitter.com/mqbqmULxUr
— Dheepan M R (@mrdheepan) November 9, 2022
இதன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் பழனிச்சாமி ரூ.15 கோடிக்கு அந்த தொன்மையான சிலையை விற்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் பழனிச்சாமி மறைத்து வைத்திருந்த 22.800 கிலோ எடையுள்ள, 58 செ.மீ. உயரமும், 31 செ.மீ. அகலமும் உள்ள வெங்கடாஜலபதி சிலையை கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், “மீட்கப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமானது என தெரிகிறது. அந்த கோவில் அர்ச்சகர் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து அந்த கோயிலுக்கு சொந்தமானதுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் பழனிச்சாமி விரைவில் கைது செய்யப்படுவார்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்