திருச்சி : பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருச்சியில் காவேரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டது. இந்நிலையில் பேருந்துக்கள் , ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு.
திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 10-ந் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக காவிரி பாலம் மூடப்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சென்று கும்பகோணம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் செல்லுமாறும், அதே வழியில் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சில கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி காவேரி பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி.. @abpnadu @Collector_Try @TrichyPolice @Trichy_Corp pic.twitter.com/ci2h4fD6wY
— Dheepan M R (@mrdheepan) September 14, 2022
மேலும் கிலோ மீட்டர் அதிகமாக இருப்பதால், இதனை ஈடு செய்வதற்காக தனியார் பேருந்துக்களில் ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை உயர்த்தி பயணிகளிடம் இருந்து வசூல் செய்கின்றனர். பேருந்துக்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல பயண கட்டணமாக ரூ.7 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.9 வசூல் செய்கிறார்கள். அதேபோல், மத்திய பேருந்து நிலையத்திற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, அன்பில் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணமானது வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஆட்டோ, வாடகை கார்களிலும் கட்டணங்களை உயர்த்தி விட்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துக்களில் முன்னறிவிப்பின்றி கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேருந்து கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் நாள் காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. ஆனால் கடந்த மூன்று நாட்களாக காலை மற்றும் மாலையில் காவிரி பாலத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகையால் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சரியான பாதையை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்