பெரம்பலூர் அருகே வீடுகளுக்கு முன் துப்பாக்கித் தோட்டாக்கள் - கிராம மக்கள் அதிர்ச்சி
இதே கிராமத்தில் 8 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியம் என்பது வீட்டிற்கு மேல் கூரையில் துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஈச்சங்காடு கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டு வாசல் முன், பயன்பாட்டிற்காக சிமெண்ட் தண்ணீர் தொட்டி ஒன்று வைத்துள்ளார். காலையில் தற்செயலாக தண்ணீர் தொட்டி பகுதிக்குச் சென்ற பெருமாள், அங்கிருந்த தண்ணீரை எடுத்து கால் கழுவ முயற்சித்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் துப்பாக்கித் தோட்டக்கள் இருந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், தனது குடும்பத்தாரை அழைத்து அதை காட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்திலும் தகவல் பரவ, அனைவரும் அங்கு வந்தனர். இந்த நிலையில், பெருமாள் வீட்டின் அருகில் உள்ள புஷ்பா என்பவரது வீட்டு வாசலிலும் துப்பாக்கி தோட்டக்கள் கிடந்ததை புஷ்பா கவனித்துள்ளார். அடுத்தடுத்து வீடுகளுக்கு முன்னால் துப்பாக்கி தோட்டக்கள் கிடந்ததால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார், வீடுகளுக்கு முன் சிதறிக் கிடந்த துப்பாக்கித் தோட்டக்களை சேகரித்தனர். அதன் பின் அங்கிருந்த கிராம மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட கிராமத்தின் அருகே துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையம் உள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து தான் தோட்டக்கள் வந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில், கைப்பற்றப்பட்ட தோட்டக்கள், பயிற்சி மையத்தில் பயன்படுத்தப்படுவதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதே கிராமத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியம் என்பது வீட்டிற்கு மேல் கூரையில் துப்பாக்கி குண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி கிராமத்தில் வீடுகளில் துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒருவேளை அது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வரும் தோட்டாக்கள் என்றால், அது இன்னும் அபாயகரமான விசயம் என்பதால், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்