மேலும் அறிய
Advertisement
Ariyalur: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூரை நோக்கி ஒரு தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூரை நோக்கி ஒரு தனியார் பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த விக்னேஷ்வரன்(வயது 29) ஓட்டினார். கண்டக்டராக கடலூர் மாவட்டம் ராஜேந்திரபட்டினத்தை சேர்ந்த கஜேந்திரன் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பஸ்சில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். காலை 9.15 மணியளவில் அந்த பஸ் செந்துறை வழியாக ராயம்புரம் சுடுகாடு அருகே வேகமாக சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சின் இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய பயணிகள் காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த செந்துறை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகனின் மகன் கார்த்திக்(வயது 19) பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் அரியலூர் அரசு கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் விபத்து ஏற்பட்டவுடன் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே பஸ் கவிழ்ந்தது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, விபத்து நடந்த பகுதியில் திரண்டனர். மேலும் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தவர்களை பொதுமக்கள் மீட்டனர்.
மேலும் அங்கு வந்த செந்துறை தீயணைப்பு வீரர்கள், பஸ்சின் அடியில் சிக்கியிருந்த கார்த்திக்கின் உடலை மீட்டனர். அவர்களுடன் வருவாய் துறையினரும், போலீசாரும் இணைந்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த பயணிகள் 29 பேரை அவர்களது உறவினர்கள் செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே விபத்து ஏற்பட்டதாலும், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். போக்குவரத்து தொடங்கியபோது, அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள், அப்பகுதியில் சாலை விரிவாக்க பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் பள்ளம் தோண்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, அங்கிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் சமாதானம் செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டிக்கொண்டே, டிக்கெட் கொடுக்கும் கருவியை சார்ஜ் போட முயன்றபோது இந்த கோர விபத்து நடந்ததாக அந்த பஸ்சின் முன்புறம் பயணம் செய்த மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர், கண்டக்டரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion