திருச்சி : சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், உரிமையாளர்களுக்கு10,000 அபராதம் - மாநகராட்சி ஆணையர்
திருச்சி மாநகரில் தெருக்கள், சாலைகளில் கால்நடைகள் சுற்றிதிரிந்தால் 10,000 ரூபாய் அபதாரம்- மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உத்தரவு.
திருச்சி மாநகரில் சாலைகளில் நடுவே கால்நடைகள் அதிகளவில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகரில் எந்தெந்த பகுதிகளில் கால்நடைகள் சுற்றுகிறது என்பதை கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாநகர் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலை, திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, திருச்சி- கரூர் நெடுஞ்சாலை மற்றும் மாநகர பகுதிகளில் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், வயலூர் சாலைப் பகுதி, பாலக்கரை பகுதி, தில்லை நகர் பகுதி, கருமண்டபம் பகுதி, மன்னார்புரம் ,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித் திரிகிறது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பாக ஏற்கனவே சில அறிவுரைகளை தெரிவிக்கப்பட்டு இருந்தது ,அதாவது கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையிலும், சாலைகளில் சுற்றித்திரியாமல் வளர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்பட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக திருச்சி மாநகர பகுதிகளில் முக்கியமான சாலைகளில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் சாலை நடுவே கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொது மக்களுக்கும்,பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருவதை தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை அவர்களது வளாகத்திற்குள்ளேயே கட்டி வைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை மீறி போக்குவரத்திற்கு இடையூராகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்வார்கள் - 10,000 ரூபாய் அபராதம் கட்டி மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அபராத தொகையை கட்டி கால்நடைகளை வாங்கி செல்லவில்லை என்றால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை விற்பனை செய்து அத்தொகை கருவூலத்திற்கு செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்துள்ளார்