நெல்லை மேயர் மீது கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ! கவுன்சிலர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் !
அவர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறி சென்றாலும் இது குறித்து கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகரத்தின் மேயராக திமுக கட்சியை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் இருந்தே இவருக்கும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்குள் பல்வேறு உட்புசல்கள் ஏற்பட்டது. இதனால் அப்துல் வஹாபின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பிரச்சனை இதோடு முடிந்து விடும் என்று திமுக கழகம் நினைத்திருந்த நிலையில் பிரச்சனை மீண்டும் மீண்டும் வெடித்தது. அதன் பின் நடைபெற்ற போராட்டம், தர்ணா, கவுன்சிலர்கள் என கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது, இந்த சூழலில் கடந்த 27 ஆம் தேதி ஆளும் கட்சியை சேர்ந்த 38 கவுன்சிலர்களும் மேயர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததன் பேரில் வரும் 12-ம் தேதி தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களை அழைத்து அவர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அங்கிருந்து சென்றார், இது குறித்து அவர் நடத்திய ஆலோசனையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நெல்லையில் இதுபோல் நீங்கள் எழுப்பும் பிரச்சினையால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே வரும் 12 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெறும் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது. இதே போல் கட்சியில் ஒவ்வொருவரையும் மாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தால் மக்கள் பணியை செய்ய முடியாது. அதனால் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அமைச்சர் புறப்பட்டு சென்றார். அவர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறி சென்றாலும் இது குறித்து கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.