நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் ஆய்வாளர்- புகார் அளித்த வழக்கறிஞர்
வழக்கறிஞருக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும் வழக்கு பதிவு செய்ய மறுக்கும் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் ஆய்வாளர்- புகார் அளித்த வழக்கறிஞர் Thoothukudi news Complainant Advocate-Inspector delaying registration of case against woman sub-inspector and woman constable even after court order - TNN நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் ஆய்வாளர்- புகார் அளித்த வழக்கறிஞர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/d472239033e1d3f0fcb9ad6fa04769b51714066418168571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீது கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த வழக்கறிஞர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இவருடைய வாடிக்கையாளர் (கிளையண்ட்) பூமி செல்வம் என்பவரை ஒரு விசாரணைக்காக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி அழைத்துள்ளார். இதற்காக பூமி செல்வத்துடன் அவருடைய வழக்கறிஞர் என்ற முறையில் முத்துச்சாமியும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் முத்துச்சாமியை பார்த்ததும் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் காவலர் சரண்யா ஆகியோர் ஒருமையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் முத்துச்சாமி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துாத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங் ஸ்ரீ தேவ் ஆனந்த் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதற்கிடையில் தூத்துக்குடி நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி மற்றும் காவலர் சரண்யா இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது, தங்களுடைய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இருந்தபோதிலும் தற்போது வரை நீதிமன்றம் கொடுத்து உத்தரவின்படி பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண் காவலர் சரண்யா மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் படி செயல்படாத மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் முத்துச்சாமி மற்றும் சில வழக்கறிஞர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாயிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பொன்னுச்சாமி என்பவர் கூறுகையில், வழக்கறிஞருக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும் வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)