முரண்டு பிடித்த முதலை; கயிற்றில் கட்டி கன்று குட்டி போல விளையாடும் இளைஞர்கள்!
மயிலாடுதுறை அருகே 300 கிலோ எடை 10அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஊருக்குள் வந்த போது, அதை பிடித்த இளைஞர்கள், கன்று குட்டிப் போல கயிற்றில் கட்டி விளையாடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே 300 கிலோ எடை 10அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஊருக்குள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பல கிராமங்கள் இருந்து வருகிறது. இந்த கொள்ளிடம் ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. முதலைகள் ஆற்றில் இருந்துகொண்டு தண்ணீர் குடிக்கச் செல்லும் கால்நடைகள் பலவற்றை தனக்கு இரையாக்கிக் கொள்ளும் நிகழ்வு நடந்தேறி வருகிறது. மனிதர்களே கூட சில சமயம் ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது இந்த முதலைகளிடம் சிக்கிய உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளது. முதலை குறித்த எச்சரிக்கை பதாகைகளும் வனத்துறையினர் சார்பாக கொள்ளிட ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது ஆற்றில் செல்லும் முதலைகளை மக்கள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதும், மேலும் ஊருக்குள் அவ்வப்போது புகுந்துவிடும் முதலைகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் வனத்துறையினர் விடுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த கரையோரக் கிராமமான சித்தமல்லியில் இன்று காலை சுமார் 300 கிலோ எடையுள்ள ராட்சத முதலை ஒன்று கிராமத்தின் உள்ளே புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடிக்க, சித்தமல்லி கிராம இளைஞர்கள் முதலையை லாவகமாக பிடித்து கயிற்றினால் கட்டி அங்குள்ள சிமெண்ட் கட்டையில் கயிறு மூலம் தற்காலிகமாக கட்டி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து காவல் துறைக்கும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் இடையே பிடிபட்டுள்ள முதலையை பார்க்க சித்தமல்லி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். முதலை பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல்கள் அளித்து பல மணிநேரம் ஆகியும் இதுவரை வனத்துறை வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ராட்சத முதலையை அங்கு உள்ள இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அதன் மேல் தண்ணீர் ஊற்றி சீண்டி விளையாடுகின்றனர் . உடனடியாக வனத்துறையினர் பிடிப்பட்ட முதலையை கொண்டு சென்று முதலை பண்ணைகளில் விட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் இதுபோன்று ஏராளமான முதலைகள் இருப்பதால் அந்த முதலையும் பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள் கொரானா வைரஸ் தொற்றின் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிக்கூடங்கள் இயங்காமல் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அவர்கள் வீட்டிற்கு வெளியே பல இடங்களில் ஓடி விளையாடுகின்றன. இந்த சூழலில் இதுபோன்று முதலைகள் ஊருக்குள் புகுவது தங்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், முதலைகளிடம் இருந்து குழந்தைகளையும், கால்நடைகளையும் காப்பாற்ற அரசு உடனடியாக வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.