வேளாண் சட்டங்கள் வாபஸ் - கும்பகோணத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
’’மத்திய அரசின் புதிய மின் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற விவசாயிகள் கோரிக்கை’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கினர். நிர்வாகிகள் மதியழகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன், திமுக நகர செயலாளர் தமிழழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் விவேகானந்தன், முல்லைவளவன், மதிமுக நகர செயலாளர் செந்தில் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
டெல்லி விவசாயிகளின் ,உறுதிமிக்க ஒருவருட போராட்டத்தின் விளைவாக, பாஜக மோடி அரசு, 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சாவூர் காவிரியின் கல்லணை ஆற்றுப்பாலம் அருகில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர்கள் கண்ணன், சாமிநடராஜன், வீரமோகன், பாலசுந்தரம், காளியப்பன் ஆகியோர் தலைமையேற்றனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் வெ.ஜீவகுமார்,பி.செந்தில்குமார், என்.குருசாமி, தொழிற்சங்க தலைவர்கள் சி.சந்திரகுமார், துரை .மதிவாணன், வெ.சேவையா, ஆர்.பி.முத்துகுமரன், கே.அன்பு, ராஜ ஜெயப்பிரகாஷ், ம.க.இ.க.மாநகர செயலாளர் ராவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்.சிவகுரு, மக்கள் அதிகாரம் தேவா,அருள், எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மோடி அரசு, நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் அறிவிப்பை தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கப்பட வேண்டும், புதிய மின்சார சட்டத்திருத்தம் 2021, சுற்றுச்சூழல் வரைவு மசோதா திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதே போல், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதை வரவேற்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்க சேர்ந்த மாணவர்கள், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,விவசாயிகள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே.செந்தில்குமார், தலைவர் ஆர்.பாரதி, ஜி.தங்கமணி மற்றும் விவசாயிகள் பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வெகுஜன அரங்கங்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும்,போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மாவட்ட செயலாளர் முஅ.பாரதி தலைமை வகித்தார். இதில் நகர நிர்வாகி மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டு கொண்டாடினர். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறுகையில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளை தேச துரோகிகள், இடைத்தரகர்கள், வியாபாரிகள், கைக்கூலிகள், அந்நிய நாட்டில் சக்திகள் உடைய தூண்டுகோல் போராடுகின்றார்கள் என்றும், பஞ்சாப் விவசாயிகள் அதிக அளவில் போராடுவதால், தனி காலிஸ்தான் கேட்கின்றார்கள் என்றும், பாகிஸ்தான் நாட்டில் தூண்டுதலாக போராடுகிறார்கள் என்று அவதூறு பரப்பியவர்கள் எல்லாம் மத்திய அரசில் இருக்கிறார்கள். அவர்கள் விவசாயிகளிடத்தில், நிபந்தனையின்றி பொது மன்னிப்பு கோர வேண்டும். பிரதமர் எடுத்திருக்கும் முடிவு விவசாயிகளின் நலன் சார்ந்த முடிவாகும். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.