வித்யாரம்பம்; தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் கலைகள் கற்றுக் கொள்ள குழந்தைகளை இணைத்து விட்ட பெற்றோர்
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்கள், வீடுகள், பள்ளிகள், கலைகள் கற்றுத்தரும் அகாடமிகள் போன்றவற்றில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கோயில்களில் சரஸ்வதி பூஜையை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் கராத்தே, இசை, நடனம், சிலம்பம் போன்றவற்றை குழந்தைகளை கற்றுக் கொள்ள வித்யாரம்பம் நடந்தது.
வித்யாரம்பம் பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கர்நாடகம் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு சடங்கு. கல்வியை குழந்தைகள் முறையாக கற்க வேண்டும் என்று இந்த நாளில் இந்ந நிகழ்ச்சி நடப்பது வழக்கம். குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்பிப்பது இந்த நாளில் துவங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் முக்கியமான விழாவை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்றும் அழைக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு நெல்லில், அரிசியில், தானியத்தில் “அ” என்ற எழுத்தை எழுத செய்வது. ஒடிசாவில் இது காதி சுவான் என்று அழைக்கப்படுகிறது. அங்கு குறிப்பாக விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. வித்யாரம்பம் விழாவில் குழந்தைகள் அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை. அடிப்படையில் குழந்தைகளுக்கான சடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கல்விச்சடங்கு குழந்தைகளை பாடத்திட்டத்தின் எழுத்துக்களில் முறையாக அறிமுகப்படுத்துகிறது. வித்யாரம்பம் விழா 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது.
இது நிறைய அறிவு கிடைக்க ஆசீர்வதிக்கப்படுவதற்காக, சிறுவர் மற்றும் சிறுமிகள் இருவருக்கும் செய்யப்படும். வித்யாரம்பம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த விழா பொதுவாக நவராத்திரியின் கடைசி நாளில், அதாவது விஜயதசமியன்று நடத்தப்படும். கற்றலை தொடங்கும் நாள் விஜயதாசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளுமாகும்.
இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கற்றலின் துவக்க விழாவானது ஆயுத பூஜை சடங்குடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. வழக்கமாக விஜயதசமி நாளில்தான் பூஜைக்காக வைக்கப்பட்ட கருவிகள் மீண்டும் பயன்படுத்த எடுக்கப்படுகின்றன. கல்வி தெய்வமான, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாக இது கருதப்படுகிறது. குருதட்சிணையானது வழக்கமாக வெற்றிலை, பாக்கு, சிறிது பணம், புதிய ஆடைகள் ஆகியவற்றை வழங்குவார்கள்.
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்கள், வீடுகள், பள்ளிகள், கலைகள் கற்றுத்தரும் அகாடமிகள் போன்றவற்றில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம். இதேபோல் தங்கள் குழந்தைகள் கலைகளை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த நாளில் சேர்த்து விடுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிலம்பம், கராத்தே, இசை, யோகா, வாய்ப்பாட்டு, பரதம் போன்ற கலைகளை கற்றுக் கொள்ள சேர்த்து விட்டனர்.
இதில் அகாடமி நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமான லோக கலாஸ்ரீ ப.ராஜேஸ்கண்ணாவிடம், பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளின் கலைப்பயணத்தை துவங்கும் வகையில் பராம்பரிய முறைப்படி குருதட்சணை வழங்கினர். நிகழ்ச்சியில் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரெங்கநாயகி மற்றும் பயிற்சியாளர்கள் அருண், சங்கீதா, கிருஷ்ணதேவராயர், ரோகித், சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோயில்களில் நடந்த வித்யாரம்பத்தில் குழந்தைகளை குருவின் முன்னிலையில் நெல், அரிசி, தானியங்கள் பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து எழுதவைக்கப்படடது. மணலில் எழுதுவது நடைமுறையை குறிக்கிறது. தானியங்களில் எழுதுவது அறிவைப் பெறுவதைக் குறிக்கிறது, இது செழிப்பைக் குறிக்கிறது. தங்கத்தைக் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறது, இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவதாக கருதப்படுகிறது.