விதிமுறை மீறும் கனரக வாகனங்கள்... போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கும் திருச்சி
போக்குவரத்து நெரிசல் என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் பாதிப்பு இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்குதான். வாங்க என்ன விஷயம் என்று பார்ப்போம்.

தஞ்சாவூர்: செம ஸ்பீடாக வளர்ச்சிப் பெற்று வரும் திருச்சியில் ரயில்வே ஜங்ஷனில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர்.
திருச்சியின் தோற்றமே தற்போது வெகுவாக மாற தொடங்கி விட்டது. பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறப்பு, விரைவில் ஐடி பார்க், அகலப்படுத்தப்பட்ட சாலைகள் என்று வெகு வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது திருச்சி. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் பாதிப்பு இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்குதான். வாங்க என்ன விஷயம் என்று பார்ப்போம்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள மேம்பாலத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகருக்குள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மட்டும் அனுமதி உண்டு. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் நாள் முழுவதும் நகரின் முக்கிய சாலைகளில் செல்வதால், மேம்பாலத்திலும், பிற முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பைக், கார் போன்ற வாகனங்களில் பயணிப்பவர்கள்தான் தினமும் மிகுந்த சிரமத்திற்கு சந்திக்கும் நிலை உருவாகிறது.
இந்த மேம்பாலம், பழைய பாலம் சீரமைப்புக்காக மூடப்பட்டதாலும், புதிய பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் செயல்படத் தொடங்கியதாலும், மிகவும் பரபரப்பான பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில் கனரக வாகனங்கள் இந்த மேம்பாலத்தை தடையின்றி பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினமும் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி நகர எல்லைக்குள் கனரக வணிக வாகனங்கள் மற்றும் காய்கறி, பழங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தடை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மட்டும் இந்த கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கனரக வாகனங்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் நாள் முழுவதும் உலா வருகிறது.
இதில் மிக முக்கியமான பகுதி... தினமும் நெரிசலில் சிக்கி தவிக்கிறது என்றால் அது திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதிதான். இங்கு போக்குவரத்து போலீஸாருக்கு வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் பெரும் சவால்தான் உள்ளது. குறிப்பாக, மன்னார்புரம் அருகே மேம்பாலத்தின் முடிவில் வாகனங்கள் கிராபோர்டு மற்றும் எடமலைப்பட்டிப் புதுரை அடைய யூடர்ன் எடுக்கும்போது வெகுவாக சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல், சத்திரம் பேருந்து நிலையம், வெள்ளமண்டி சாலை, மதுரை சாலை, காந்தி மார்க்கெட், அரியலூர் சாலை போன்ற முக்கியப் பகுதிகளிலும், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில், பெரிய லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுகின்றன. இவ்வாறு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்களால்தான் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த கனரக வாகனங்களுக்கான குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்புப் பலகைகளைத் தெளிவாக வைக்க வேண்டும். விதிமீறல்களைக் கண்காணிக்க வேண்டும். இதில் எவ்வித தளர்வுகளும் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், மேம்பாலத்தில் ஒருவழிப் பாதையை மீறிச் செல்வது என்பது மிகவும் ஆபத்தானது. இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும். இது போன்ற விதிமீறல்களைத் தடுக்க கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும். நகரின் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதால் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே விதிமுறைகளை மீறி இயக்கும் கனரக வாகனங்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கக்கூடாது. முதல் முறை அபராதம், அடுத்த முறை கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருச்சியின் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.





















