தஞ்சையில் குடிபோதையில் வந்த இளைஞரை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பிய டிராபிக் போலீஸ்
’’போதையில் இருக்கும் இளைஞரை தண்டனை கொடுத்தால், அவருக்கும் ஒன்றும் தெரியாது. கூலி வேலை செய்பவராக இருப்பதால், அபராதம் கொடுத்தால், வறுமையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கஷ்டம்’’
நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தஞ்சை மாநகரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் இருந்த பகுதிக்கு எதிரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்பனை ஜரூராக நடைபெற்று வந்தது. அச்சாலை அனைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை சென்று வரும் பிரதான சாலையாக இருந்தாலும், வெளிப்படையாக யாரும் கண்டு கொள்ள வில்லை. இதனால் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்தாலும், மதுபானம் சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இரவு நேரத்தில் டிராபிக் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்எஸ்ஐயுடன் தஞ்சை கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெண் போலீசாரின் காலில் ஒரு வாலிபர், குடிபோதையில் காலில் விழுந்து கெஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்எஸ்ஐ இருவரும் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் சென்று பார்த்த போது, அந்த வாலிபர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவரும் என்றும், புதிய பைக்கில் வந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் குடிபோதையில் தான் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என தெரியாமல் புலம்பியபடி இருந்தார். இன்ஸ்பெக்டரும், எஸ்எஸ்ஐயும் சென்றவுடன், அவர்களது காலில் குடிபோதையில் விழுந்து தான் என்ன செய்கின்றோம் என புலம்பினார்.
இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குடிபோதையில் இருக்கும் வாலிபரை, பைக்கில் அனுப்பினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, தண்ணீர் பாட்டிலை விலைக்கு வாங்கி வந்து, அந்த வாலிபரின் தண்ணீர் பாட்டிலை கொண்டு, தலையில் ஊற்றினார். பின்னர் முகத்தை கழுவ செய்து, சிறிது நேரம் நிற்க வைத்தார். தொடர்ந்து அந்த இளைஞரை சுமார் 50 மீட்டர் துாரம் ஒடி விட்டு, வா என்றார். அந்த இளைஞரும் 50 மீட்டர் துாரம் ஒடி விட்டு வந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து, போதை லேசாக தெளிந்தவுடன், அறிவுரைகளை கூறி ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்று அனுப்பி வைத்தார்.
இதனை பார்த்து கொண்டிருந்த கீழவாசல் பகுதியிலுள்ள வணிகர்கள், பொது மக்கள், மனித நேயமிக்க டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு வாழத்து கூறியவுடன், போதையில் வந்த இளைஞரை, தெளிய வைத்து, அவருக்கும், அவரது குடும்பத்தை காப்பாற்றியதற்கு நன்றியை தெரிவித்தனர். இது குறித்து டிராபிக் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், போதையில் இருக்கும் இளைஞரை தண்டனை கொடுத்தால், அவருக்கும் ஒன்றும் தெரியாது. கூலி வேலை செய்பவராக இருப்பதால், அபராதம் கொடுத்தால், வறுமையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கஷ்டம். இதனால் அவரது வயிற்றில் அடித்த பாவம் சேரும். எனவே, அந்த இளைஞருக்கு போதை தெளியவைத்து, அவரிடம் போதையில் வாகனத்தை ஒட்டக்கூடாது, வீட்டில் மனைவி, தாய், குழந்தைகள் உள்ளனர். போதையில் சென்று விபத்தில் சிக்கி கொண்டால், உயிர் பிழைப்பதே சிரமம் என்று அவருக்கு உணரும் படி அறிவுரைகளை கூறினேன். பின்னர், உனது குடும்பத்தை காப்பாற்ற, மது அருந்த மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். போதை லேசாக தெளிந்த நிலையில், இனிமேல் குடிப்பதை நிறுத்தி விடுகின்றேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் ஒரு இளைஞனின் உயிரை காப்பாற்றியதோடு, ஒரு குடும்பத்தை காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது என்றார்.