திருவாரூரில் அரசு உதவியை நாடாமல் விவசாயிகளே அமைத்த சாலை - எத்தனை கிலோ மீட்டர் தெரியுமா..?
அரசு உதவியை நாடாமல் விவசாயிகளே ஒன்றிணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாலை அமைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள், 434 ஊராட்சிகள் என ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய மாவட்டம் திருவாரூர் மாவட்டம் ஆகும். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இதுவரை பல ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் இல்லாமல் நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை புதியதாக போட்டு தர வேண்டும் என வலியுறுத்தி பல கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்களிடம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வழங்கி வருகின்றனர். அதே நேரத்தில் அரசு ஒரு சில பகுதிகளில் புதிய சாலை அமைத்தாலும் பல கிராமங்களில் இன்னும் சாலை அமைக்கப்படாமலும் குடிநீர் வசதியை நிறைவேற்றித் தராமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சீதக்கமங்களம் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது. விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல விவசாயம் செய்வதற்கு வரப்பு மட்டும் இருந்த நிலையில் இடுபொருட்கள் எடுத்து செல்ல ஆதி காலம் முதல் தற்போது வரை விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்து இருந்தனர். தற்போது அரசாங்கத்தின் உதவியை நாடாமல் 11 விவசாயிகள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் மேலராமன்சேத்தி முதல் பனமரத்து கரை வரை 3 கிலோமீட்டர் தூரம் மண் சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் ரிப்பன் வெட்டி, பூஜை செய்து பூசணிக்காய் உடைத்து துவக்கி வைத்தனர். இதனால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். மேலும் இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் அரசு உதவியை நாடாமல் செய்த செயலால் அப்பகுதியினர் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இதேபோன்று பல கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் விவசாய நிலத்தின் வரப்பை பயன்படுத்தி செல்லக்கூடிய நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக விவசாய நிலத்திற்கு விவசாயிகள் விதை நெல் உரம் உள்ளிட்ட இடுபொருட்களை சாலை வசதி இல்லாத காரணத்தினால் வாகனத்தின் மூலம் கொண்டு செல்ல முடியாத நிலை தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. சீதக்கமங்களம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களுடைய பணத்தில் சொந்தமாக சாலை அமைத்தது போல் பல கிராமங்களில் இதனை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு விவசாயிகள் தங்களது விளை நிலத்திற்கு செல்ல சாலை அமைக்கும் பணியினை தாங்களாகவே செய்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளதாக பல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயிகள் விளைநிலத்திற்கு இடுபொருள்களை கொண்டு செல்லும் வகையில் எந்தெந்த பகுதிக்கு சாலை வசதி தேவைப்படுகிறதோ அதனை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்