திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் ஆலய தேரோட்டம் - கருடன் வானில் வட்டமிட்டதால் பக்தி பரவசம்
நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ணமங்கை ஆண்டானின் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் அழைக்கப்படுகிறது
திவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் 27 ஆவது தலமாகவும், பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும், மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளை கைப்பிடித்த தலமாகவும், சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு அமைந்துள்ள புஷ்கரணியில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக நம்பப்படும் தலமாகவும் விளங்குகிறது. 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ணமங்கை ஆண்டான், இக்கோயில் பெருமாளை வழிபாடு செய்து வாழ்ந்து வந்தார். பெயரிலேயே இந்த ஊரின் பெயரும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற திருவாரூர் திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் ஆண்டுதறும் பங்குனி மாதம் தொடங்கி சித்திரை மாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சேஷ வாகனம், பலவக்காள் சக்கரம், புன்னை மர வாகனம் ஆகியவற்றில் பக்தவத்சலப் பெருமாள் வீதியுலா தினந்தோறும் நடைபெற்று வந்தது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா சித்ரா பெளர்ணமியான இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க வரிசை எடுத்து வரப்பட்டு தேரில் வீற்றிருந்த பக்தவத்சலப் பெருமாளுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வெங்கட்ரமணா கோவிந்தா என்று பக்தர்கள் பக்தி முழக்கமிட்ட வாரே தேரை முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சுற்றி இழுத்து வந்தனர்.
மேலும் தேர் தொடங்குவதற்கு முன்பும் தேர் அசைந்து வந்து கொண்டிருக்கும் போதும் கருடன் வானில் வட்டமிட்டு வந்தது. சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேரின் பின்புறம் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. குடவாசல் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருந்தது. மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் தேருக்குப் பின்னால் தொடர்ந்து சென்றது. பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலுதவி தருவதற்கு ஐந்து மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டு இருந்தது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் அடிப்படையில் குடவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.