திருவாரூர் மாவட்டத்தில் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று அதிகாலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை என்பது தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கொரடாச்சேரி குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்பொழுதும் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காலை 8 மணிக்கு விடுமுறை அறிவிப்பு என்பது வெளியானதால் முன்னதாகவே வெளியூர்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரக்கூடிய மாணவர்கள் பாதி தூரம் சென்று பின்னர் மீண்டும் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என மாணவர்கள் தெரிவித்தனர். ஆகையால் விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் மாணவர்களும் பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்துள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று கனமழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தொடர் கனமழை என்பது விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய வேதனை தரும் விஷயமாக மாறி உள்ளத. காரணம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4000 ஏக்கருக்கு மேல் நெல் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு தமிழக அரசு அறிவிக்காத நிலையில் விவசாயிகளுக்கு இந்த மழை மிகப்பெரிய அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.