திருவாரூரில் பழமை வாய்ந்த பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாய நாதர் ஆலய குடமுழுக்கு விழா
தூவாய நாதர் கோபுரம், பஞ்சின் மெல்லடியாள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன் கோபுரம், சனீஸ்வர பகவான் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட ஏழு கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு
பிறந்தால் முக்தி தரும் தாமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சுந்தரருக்கு புற்றிடம் கொண்ட புண்ணியம் தன்னை தோழனாக தந்து அருள் திருவிளையாடல்கள் பலவற்றை செய்த பெருமையை உடைய தலமாகவும், சைவசமய குரவர் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும், கமலாலயம் என்கிற தேவ தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் சங்கு தீர்த்தம் முதலிய எண்ணற்ற தீர்த்தங்களை உடைய தலமாகவும், ஆகாச புனித தீர்த்தம் என்கிற திருக்குளம் உடைய ஆலயமாகவும், துர்வாச முனிவர் வழிபட்ட தலமாகவும், சுந்தரர் வலது கண் பெற்ற தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆழித்தேரின் மேற்கு பாகத்தில் கீழ வீதியில் அமைந்திருக்கும் பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயம் விளங்குகிறது. இக்கோயிலில் செப்பபணிடும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த 6 ஆம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், தன கஜ புஜை, விக்னேஸ்வர பூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், அம்பாள் கலாகர்ஷணம் யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று இரண்டாவது கால யாகபூஜை மற்றும் 3 ஆவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகபூஜை தொடங்கி நடைபெற்ற நிலையில் தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று மூலவரான தூவாய நாதர் கோபுரம், பஞ்சின் மெல்லடியாள் கோபுரம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோபுரம், ஐயப்பன் கோபுரம், சனீஸ்வர பகவான் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட ஏழு கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் திருவாரூர் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த குடமுழுக்கை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் இந்த ஆலயம் பழுதுபார்க்கும் பணிகள் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வந்தது. செப்பனிட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது இந்த குடமுழுக்கு முன்னிட்டு திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடமுழுக்கிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் தற்காலிக கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் நடமாடும் மருத்துவ குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.