திருவையாறில் வாழை, நெல் மணிகளுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் புறவழிச்சாலைக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து வாழை, நெல்கதிர் என சாகுபடி பயிர்களுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக் காலை, மாலையில் பள்ளி நேரங்கள், அலுவலகம் முடியும் நேரம் என்று திருவையாறு கடைத் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சரியாக வெகு நேரம் பிடிக்கிறது.
இதனால் வெளியூர் பயணிகள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். கும்பகோணம், அரியலூர் உட்பட பல பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது தினமும் நடக்கும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக மாலை நேரத்தில் திருவையாறு கடைவீதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும்.
இதையடுத்து நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர். தற்போது பெரம்பலுார் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவுப்படுத்தும் பணி சுமார் 91.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
இதில், திருவையாறில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கண்டியூர், மணக்கரம்பை , கீழே திருப்பூந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என்று விவசாயிகள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், மூன்று போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று திருவையாறு தாசில்தார் அலுவலகம் முன்பு, வாழை இலை, வாழைத்தார், நெல் மணிகள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கையில் ஏந்தியப்படி, வயல்வெளிகளை அழித்து அமைக்கும் புறவழிச்சாலை எங்களுக்கு வேண்டாம். திருவையாறு கடைவீதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்க அரசு அலுவலர்கள் துணை போக வேண்டாம். ஆக்கிரமிப்புகளை உடன் அகற்றிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், திருவையாறு நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆனால் அதை செய்யாமல் முப்போகம் விளையும் சாகுபடி வயல்களை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இது எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல். இதை தடுத்தும் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.