உட்கார சேரே இல்ல என்னத்த ஸ்மார்ட் சிட்டியோ....! - தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அவதி
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில், பயணிகள் அமர இருக்கைகள் அமைத்த தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் கடந்த 8 ஆம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி முதல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து நகர பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்களுக்கான பேருந்துகள் வரும் வரை காத்திருக்கின்றனர். அவர்கள் அமர இருக்கைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. பலர் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டே காத்திருந்திருக்கின்றனர். தஞ்சையில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்சுகள் கிராம பகுதிகளுக்கு செல்வதால், அந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வந்து செல்வதால், பயணிகள் முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால் அங்கு இருக்கைகள் இல்லாததால் கர்ப்பிணி தாய்மார்கள், கைகுழந்தைகளை வைத்துள்ளவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தனவிஜயகுமார் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பயணிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டே இருப்பதால் அவதிப்படுகின்றனர். மேற்கூரையும் என்பது பெயரளவுக்கே பொருத்தப்பட்டுள்ளது. மழை பெய்தால் சாரல் அடிக்கும், வெயில் காலங்களிலும் வெப்பம் அதிகமாக காணப்படும் நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்க அழகாக இருக்கிறதே தவிர மழை, வெயிலில் பொதுமக்களுக்கு பயன்தராத நிலையில் உள்ளது. கிராமங்களிலுள்ளவர்கள் குறிப்பிட்ட பஸ்சுகள் சென்றால் நீண்ட நேரத்திற்கு பிறகு தான் பஸ் வரும் என்பதால், அவர்கள் அவசரமாக வேலைகளை முடித்து விட்டு, முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்கள், ஆனால் அவர்களுக்கு இருக்கை வசதிகள் இல்லாததால், பஸ் நிலையத்திலுள்ள பஸ்சுகள் நிற்கும் பகுதியிலேயே அமர்ந்து விடுகிறார்கள். மேலும் பெரும்பாலான முதியவர்கள் வெற்றிலை சீவல் சாப்பிடுவதால், அமர்ந்துள்ளவர்கள், எழ முடியாமல், அங்கேயே எச்சிலை துப்பி விடுகிறார்கள்.
அதே போல் பேருந்து நிலையத்தில் கடைகாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை காட்டிலும், ஆக்கிரமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்து பேருந்துகள் வரும் வரை காத்திருக்க இருக்கைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர தேவையான இருக்கை வசதிகள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உண்டு, இந்த இருக்கைகளை ஒரிரு நாட்களில் பொருத்தப்படும் என்றார்.