துணைவேந்தர் பொறுப்பு குழுவை உடன் அமைக்கணும்... பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அலுவல் பணியாளர்கள் சங்க தலைவர் க.சக்திசரவணன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்பு குழுவினை உடன் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக அலுவலக பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அலுவல் பணியாளர்கள் சங்க தலைவர் க.சக்திசரவணன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுநாள் வரை நடைபெறாத, விரும்பத்தகாத நிகழ்வுகள் தற்போது நிகழ்ந்து வருகிறது. இது தமிழ்ப் பல்கலைக் கழக நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு குறித்த அச்சத்தை உண்டாக்குகிறது. இத்தகைய சூழலை போக்க உடனடியாக சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி, துணைவேந்தர் பொறுப்பு குழுவினை உடனடியாக, தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் அமைக்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு நிரந்தரப் பதிவாளர் பணியிடத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், பதிவாளர் பணியிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரப் பதிவாளரை உடனே நியமிக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை மற்றும் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு தொகைகளுக்கான வட்டித் தொகையை கணக்கீடு செய்து அதன் இருப்பு விவரங்களை உரிய பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில், ஆய்வு இருக்கை அமைப்பது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறோம் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கோ.ராஜ்மோகன் நன்றி கூறினார்.