கும்பகோணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவு திருவிழா
எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.
இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் கோநகர் ஸ்கூல் ஆஃப் நர்சிங் இணைந்து மாபெரும் சிறுதானிய உணவு திருவிழாவை கும்பகோணத்தில் நடத்தின.
நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். கோநகர்நாடு நர்சிங் கல்லூரி முதல்வர் மைதிலி சக்திவேல் முன்னிலை வகித்தார். கும்பகோணம் ரெட்கிராஸ் துணைத்தலைவர் ரொசாரியோ வாழ்த்துரை வழங்கினார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கோவை பாரதியார் பல்கலை கழக ஆட்சி பேரவை குழு உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் சிறுதானியங்கள் பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், தினை, சம்பா, கருப்பு கவுணி, கடலை போன்ற சிறுதானிய உணவுகள் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு சிறுதானிய வகைகள் அதன் பயன்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து கும்பகோணம் ரெட்கிராஸ் சார்பில் கும்பகோணம் அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோட்டாட்சியர் பூர்ணிமா விருது வழங்கி கௌரவித்தார். இறுதியாக கோரமண்டல் ரயில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் விவேகானந்தா கலாம் யூத் கிளப் தலைவர் கணேசன் செய்திருந்தார். விழாவில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், நேருயுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள், ரெட்கிராஸ் அமைப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
சிறுதானியமான திணையில் அதிகளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப் பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும். விரைவில் செரிமானமாகும்.
எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது. இவை குறித்து பொதுமக்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.