தஞ்சை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ விசாரிப்பது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி - பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம்
’’திமுகவின் 8 மாத கால ஆட்சியில் சாதாரண மனிதருக்கு நீதி கிடைக்க மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது’’
தஞ்சையில் பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஐகோர்ட்டில் நீதி கிடைத்துள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இது சாதாரண மனிதன், சாமானிய மனிதரின் போராட்டத்திற்கு மதிப்பளித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கத்து. நீதிக்காக போராடிய பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழகத்தில் இருக்ககூடிய தி.மு.க. இந்த வழக்கில் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டது. இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களை அச்சுறுத்துவது, அலைகழிப்பது, இவ்வழக்கை நீர்த்து போகச்செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் நீதிமன்ற நியாத்தின் பக்கம் நின்று நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளார்கள். திமுகவின் 8 மாத கால ஆட்சியில் சாதாரண மனிதருக்கு நீதி கிடைக்க மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. சாதாரண மக்களுக்கு அரசாங்கத்தால் நீதி கிடைக்கவில்லை. ஆனால் இந்த வழக்கில் நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி உள்ளது.
சி.பி.ஐ. விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவரும். இந்த விவகாரத்தில் எந்த கட்சியும் ஏழை பெண்ணுக்கு நீதி கிடைக்க போராட வில்லை. மதரீதியாக இப்போராட்டத்தை கையில் எடுக்க வில்லை. ஒரு மாணவி உயிருக்கு போராடிய நிலையில், உயிர் இழப்பதற்கு முன் கொடுத்த வாக்கு மூலத்தின் உண்மை இருக்கா இல்லை என்பதை விசாரிக்க வேண்டும் என்று இங்குள்ள ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல் துறையினர் தயாராக இல்லை. இது வேதனைக்குரிய விஷயமாகும். திமுக உள்பட எந்த கட்சியில் இப்பெண்ணுக்காக குரல் கொடுக்கவில்லை. நீதி கேட்க வில்லை, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை.
பல்வேறு கட்சியினர் பள்ளி நிர்வாககத்தினரிடம் பேசி, உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று கூறி உத்தரவாதம் அளித்துள்ளார்கள். அப்பெண்ணின் வாக்குமூலம், பெற்றோர்களின் வாக்கு மூலத்தை கூட எடுக்காமல், பள்ளிக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது. இன்னும் சிலரது வாக்கு மூலத்தை வாங்கி வைத்துள்ளோம். இதனை எங்கு ஒப்படைக்க வேண்டுமா அங்கு ஒப்படைப்போம்.
தமிழகத்தில் படுகொலைகள், கற்பழிப்புகள் நடைபெற்று வருகிறது. கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தஞ்சை மாநகராட்சி 51 வார்டுகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது என்று எங்களது கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவாக கூறியுள்ளார் என்றார்.பேட்டியின் போது மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.