தஞ்சாவூர்: இதுவரை பயிர்கடன் வழங்கவில்லை - தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்
’’தமிழக அரசு பயிர் சேதங்களுக்கு அறிவித்து நிவாரணம் என்பது யானைப்பசிக்கு சேளாப்பொறியாக உள்ளது’’
கூட்டுறவு வேளாண்மை தொடக்க வங்கியில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்கடன் இதுவரை வழங்கவில்லை என கோரி, தஞ்சாவூர் கலெக்டர் முன்பு விவசாயிகள் தலை துண்டை போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட திருவோணம் வட்டார விவசாயிகள் நலசங்க செயலாளர் வி.கே.சின்னதுரை உள்ளிட்ட விவசாயிகள், ஊராணிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு கீழ் 27 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், திருவோணம் ஒன்றியம் ராஜாளிவிடுதி, வெட்டுக்கோட்டை, தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, பூவாளூர் உள்ளிட்ட பல சங்கங்களில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் கேட்டு கடந்த மூன்று மாதங்கள் அலையும் நிலையில், இதுவரை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கலெக்டர் முன்பு தலையில் துண்டை முக்காடாக போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பயிர் கடன் வழங்காத பகுதிகளை கணக்கு எடுத்து சிறப்பு முகாம் நடத்தி வழங்கிட ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். ஆனால் விவசாயிகள் நலச் சங்க செயலாளர் சின்னத்துரை தலைமையில் விவசாயிகள் அனைவரும் குறைதீர் கூட்டத்திதை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மத்திய, மாநில நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 ம் அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்காத வகையில் யூரியா, பொட்டாஷ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உர சாக்கு பையுடன் நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து குறைத்தீர் கூட்டத்தில் விவசாயி ஜீவகுமார்; பயிர்கள் தண்ணீரில் பாதிக்கப்பட்டு பயிர் கரைதல் நோய் உருவாகியுள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக தண்ணீரில் இருந்த இளம் பயிர்களை வேளாண் விஞ்ஞானி கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரமும் வழங்க வேண்டும்.
டெல்டாவில் சிங்சல்பேட் உரத்தட்டுபாடு உள்ளது. இதற்காக அரசு சார்பில் ஏக்கருக்கு 10 கிலோ வழங்க வேண்டும்.எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றார்.காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.,ரவிச்சந்தர்; தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இருவரும் தான் இரவில் ஆய்வாக வந்தனர். அதை போல மத்திய குழுவினரும் இரவில் வந்து ஆய்வு செய்தனர். இது ஒரு கண்துடைப்பு போல உள்ளது. உரத்தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பயிர் சேதங்களுக்கு அறிவித்து நிவாரணம் என்பது யானைப்பசிக்கு சேளாப்பொறியாக உள்ளது. இதை மாற்றி அறிவிக்க வேண்டும் என்றார்.